சிற்றகல் - வீட்டுக்குள் ஒளிரும் விண்மீன்


    1973 லிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் கலாப்ரியாவுக்கு வணக்கத்துடன் இந்தக் கவிதை நூலைப் பார்ப்போம். 'சிற்றகல்' அவரது 75ஆம் ஆண்டின் ஒளிவிளக்கு. கலாப்ரியாவின் நூல்களில் வாசகனுக்கு என்றொரு பரப்பு இருக்கிறது. அதே போல் இளம் கவிஞர்களுக்கு ஒரு நடைவண்டி இருக்கிறது.

    அவருடைய கவிதைகளைப் படிக்கும் முன்பாக முன்னுரையைப் படிப்பது அவசியம். அதில் அவர் வாசகனுடன் கைகோர்த்து அழைத்துச் செல்வார். வெள்ளம் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு எப்படி வந்தது என்பதை அவர் விளக்கும்போதே ஒரு கவிதைக்குத் தலைப்பு எத்தனை தூரம் இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தித் தருகிறது என்பதைப் பாடம் நடத்திவிடுகிறார். 
இந்த நூலில் பரிதவிப்பைச் சொல்லும் கவிதைகள், ஓர் உவமையை, படிமத்தை மாற்றி மாற்றி அழகுபடுத்திப் பார்க்கும் கவிதைகள், காட்சிகளை முன்னிறுத்தும் கவிதைகள் பல இருக்கின்றன.
மூன்றாவதாக உள்ள கவிதை இது:

வெளிப்படுத்த முடியாத 
ஆசைகளென மிதக்கும்
தான் தொட நினைத்த 
வெண்மேகங்களை
அனாதரவாய்ப் பார்க்கிறது
பறவைகள் பயந்தொதுங்கும்
சோளக்கொல்லை பொம்மையின் 
தோளில் சிக்கித் தொங்கும்
பட்டமொன்று
எந்தச் சிறுவன் கை
தவறவிட்டதோ

    இந்தக் கவிதையைப் படித்து முடிக்கும்போது கழிவிரக்கம், பரிதவிப்பு எல்லாம் சூழ்கிறது. 'பறவைகள் பயந்தொதுங்கும்' என்ற சொற்கள் பட்டத்தின் வலியை, தவற விட்ட சிறுவனின் கையறு நிலையைச் சொல்லி விடுகின்றன.
    நினைவுகள் நம்மை மேய்த்துக்கொண்டிருக்கின்றன. கலாப்ரியா எழுதிய நினைவுகள்தானே நூல்களாகக் குவிந்திருக்கின்றன. 
    சிற்றகலில் உலராத நினைவு ஒன்று. பிரிந்துவிட்ட நண்பர்கள். அல்லது பிரிந்துவிட்ட காதலர்கள். நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு திருமணத்தில் அல்லது வேறு ஏதோ விழாவில் பந்தியில் பார்த்துக்கொள்கிறார்கள். உணவு என்பது பேச்சாகத்தான் இருக்கும். பேச்சின் ஈரம் கை உலர்வைதையும் பொருட்படுத்தாது. அதனை அப்படியே கவிதையில் தருகிறார். 

நீண்ட நாள் கழித்து 
சாப்பாட்டுப் பந்தி முடித்து 
கைகழுவப் போகையில் சந்தித்தேன்
எச்சிற்கை காய்வதைப் பொருட்படுத்தாமல் 
பேசிக்கொண்டே இருந்தோம்
பிரிந்துபோன பின்னும்
விருந்து வைக்கின்றன
உலரவே உலராத நினைவுகள்

    இன்னொரு சித்திரம். அது ஒரு சித்திரக்காரனின் ஓவியம். ஓவியன் வரைந்துகொண்டிருக்கும்போது அந்த இடத்தைப் பார்த்திருந்தால் தெரியும். வண்ணக் கலவைகள். தூரிகைகள். ஒரு பக்கம் அவுட்லைன் மட்டும் இருக்க, ஒரு பக்கம் வண்ணமாக இருக்கும் தாள். கன்னம், கை என அங்கங்கே வண்ணக் கலவை தெறித்த தடம். இவை எல்லாம் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று இந்தக் கவிதை சொல்கிறது.

ஓவியன் அறையில் 
முடிவுறாத ஓவியமொன்றிற்கு
மௌனத் துணையாய்
தூரிகைகளும்
வர்ணக் குப்பிகளும்
கலைந்து இறைந்து
கிடப்பதொரு
பெருஞ்சித்திரம்

    மொழியின் லாகவம் கவிஞர்களை அதனுடன் விளையாட வைக்கும். வெறும் விளையாட்டுதானா என்றால் இல்லை. அதனுள் வாசகனை இழுத்துக்கொள்ளும் பொறி இருக்கும். அப்படி மொழியால் வலைபின்னும் கவிதைகள் இவை.

புத்தனின் புன்முறுவல்
 செதுக்குவதை விடவும்
அவன் தலையில்
108 நத்தைகள் செதுக்க
அதிக நுணுக்கம் தேவைப்படுகிறது

    நத்தைகள் செதுக்க நுணுக்கம் வேண்டும் என்கிறாரே, அப்படியானால் புன்முறுவல் சுலபமா? என்றால் அதற்கு இன்னொரு கவிதை வருகிறது.

புத்தன் தலையில் 
108 நத்தைகள் செதுக்கச் சிரமப்படும்
சிற்பியின் மெனக்கெடலைக்
கண்டுதான்
சித்தார்த்தனின் 
அந்த அழகான புன்னகை
அவன் இதழ்க் கடையில் 
தானே கனிந்திருக்குமோ

    சிற்பிக்கு ஒரு தொந்தரவு உண்டாகிறது. அநேகமாக கலைஞர்கள், அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் இப்படியான தொந்தரவு வரவே செய்யும். 

யாளி வாய்க்குள் உருளும் கல்
செதுக்கி முடிக்கும் வரை
சிற்பியின் கனவைத்
தொந்தரவு செய்து கொண்டிருந்தது

    கவிதையையைப் பற்றி எத்தனை விளக்கம் கொடுத்தாலும் தீர்வதில்லை. வாழ்க்கைக்கான சாட்சியாகக் கவிதைகள் இருக்கின்றன என்பார்கள். 
கலாப்ரியா என்றால் சுருக்கம். 

மொழியின்
மாறுவேடங்களே
கவிதைகள்

கவிதை என்றால் என்ன என்று சொல்வதற்கு மூன்று சொற்கள் போதுமாயிருக்கின்றன அவருக்கு. 

 கவிஞன் விடுதலையைத் தேடியலைபவன். பறவையின் சிறகுகளில் அடைக்கலமாவது அதனால்தான். கவனத்தில் சிக்கும் ஒவ்வொரு எழுத்தும் காட்சியும் கவிதையாகும். அதற்கு இந்தக் கவிதை ஆதாரம். பின் அட்டையிலும் இடம் பிடித்திருக்கிறது இக்கவிதை.

பறக்கும்போது பறவைகள்
கால்களை மறந்துவிடுகின்றன
உறங்கும்போது அவை
பாடல்களை மறந்துவிடுகின்றன
ஊட்டும்போது அவை 
பசியை மறந்துவிடுகின்றன
கூடு கட்டும்போது
காதலை மறந்துவிடுகின்றன
செரிக்கும்போது
விதைகளை  மறந்துவிடுகின்றன
விடுதலையை மட்டும்
ஒருபோதும் மறப்பதில்லை.

    நாமும் பறவைகள்தான். விடுதலையை மட்டும் மறந்துவிடுகிறோம்.
கலாப்ரியாவின் கவிதைக்குள் சென்று வந்த பிறகு அன்றாடங்கள் இன்னொரு விதத்தில் நமக்குத் தோற்றமளிக்கும். தம்மைப் புதுப்பித்துக்கொண்டே, செயல்பட்டுக்கொண்டே இருக்கும் மகாகவிஞர் யாரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர் என்பதைப் புத்தகக் காட்சிகளில் பார்த்திருக்கிறேன். 75 ஐக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அவரை வாழிய வாழிய என வாழ்த்துகிறேன்.  

Comments