"பாவப்பட்டவர்கள்" - நெஞ்சில் பாரம் சுமப்பவர்கள்


 

    

    இந்த உலகத்தின் சிரஞ்சீவி வரம் பெற்று இருப்பது வறுமை. வறியவர்களிடம் இதயம் வறிதாக இல்லாதவரையில், உணர்வுகள் வறுமையை எட்டாத வரையில் அவர்கள் வறுமையைப் பொருட்படுத்துவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி அன்பை மட்டும் எப்போதும் வறுமைக்கோட்டுக்கு மேலேயே வைத்தபடி எழுதியவர். 

தஸ்தாயெவ்ஸ்கியின் முதல் நாவல் "Poor Folk" இன் தமிழாக்கம் "பாவப்பட்டவர்கள்". இந்த நாவல் அன்றைய ரஷ்ய எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அனைவராலும் போற்றப்பட்டது. மாக்கர் தேவுஷ்கின் என்ற முதியவருக்கும் பார்பெரா அலெக்ஸீவ்னா என்ற இளம்பென்ணுக்கும் இடையே இருக்கும் அன்பின் வழியாக, வறுமையின் கூறுகளை எடுத்துச் சொல்லும் நாவல்.

நிக்கலாய் கோகல் எழுதிய  "The Overcoat" சிறுகதையின் தாக்கம் இதில் உண்டு. வறுமையையும் அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தையும் கோகலின் கதை அப்பட்டமாக விவரித்திருக்கும். அதே வறுமையான சூழலில் இருக்கும் நாயகன் தேவுஷ்கின் தன்னைவிட முப்பது வயது இளைய பெண்ணுடன் மனத்தளவில் ஏற்படும் காதலையும் இந்தக் கதை மையப்படுத்துகிறது.

இருவரையும் தின்றுகொண்டிருப்பது வறுமைஅலெக்ஸீவ்னாவின் தந்தை குடிகாரர். கிராமத்தில் வசித்த அவள், தந்தை இறந்தபின் அன்னா எனும் தாயின் உறவுக்காரப் பெண்மணியின் உதவியால் அவளது குடும்பத்துடன் நகரத்துக்கு வருகிறாள். அன்னாவினாலும் துன்பமடையும் அவள் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்துகிறாள். அவளுக்குத் தூரத்து உறவினரான தேவுஸ்கின் அதே பகுதியில் மிகவும் ஏழ்மை நிலையில் வசிப்பவர். அலெக்ஸீவ்னாவுக்கும் தேவுஷ்கினுக்கும் நடக்கும் கடிதப் போக்குவரத்திலேயே நாவல் நகர்கிறது. கோகலின் நாயகன் போல தேவுஷ்கினும் பிரதியெடுக்கும் குமாஸ்தா (copy clerk). தேவுஷ்கின் தனது சொற்ப வருமானத்திலும் பார்பெராவுக்காகச் செலவு செய்ய விரும்புகிறார். அதே போல பார்பெராவும் அவருக்கு உதவ எண்ணுகிறாள். தேவுஷ்கினின் வாழ்க்கைப் பிடிப்பு பார்பெரா மீது கொண்டிருக்கும் அன்பு. கந்தலான கோட்டு அணிந்திருக்கும் தேவுஷ்கினை ஒரு புதிய கோட்டு வாங்கிக் கொள்ள அறிவுறுத்துகிறாள் பார்பெரா. தான் வீட்டு வேலைக்குச் சென்றால் ஓரளவு சம்பாதிக்க முடியும் என்று எழுதும் அவளிடம், அவள் தன்னை விட்டு தூரமாகச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார் தேவுஷ்கின். வறுமை துரத்துகிறது. அன்பு இழுக்கிறது. அவளுக்காகவும் தனது வீட்டு வாடகை மற்றும் முக்கியமான தேவைகளுக்காகவும் அவர் கடன் வாங்க எத்தனிக்கும் தருணங்களை தஸ்தாயெவ்ஸ்கி அச்சு அசலாகக் காட்டுகிறார்.    பார்பெரா இலக்கியத்தைக் கைவிட, தேவுஷ்கின் அதில் ஈடுபாடு கொள்வதை இயல்பாகக் கையாண்டிருக்கும் நேர்த்திதான் தஸ்தாயெவ்ஸ்கி. நோய்க்கும் வறுமைக்கும் இரையாகாமல் பார்பெரா தப்பிக்க இருக்கும் ஒரே வழி மனைவியை இழந்த வயதானவரை மணந்து கிராமத்துக்குச் செல்வது. தனக்குப் புதிய கோட்டு தேவையில்லை. கந்தலான பழசே போதும், பார்பெரா இல்லையென்றால் தான் வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற கெஞ்சலுடன், கண்ணீருடன் தேவுஷ்கின் கடிதம் முடிகிறது

சிறிய நாவல். ஆனால் இதில் வறுமையின் பிடிக்கு ஆளான பாத்திரங்களால் மனத்துக்குள் இரும்புக் குண்டு ஒன்றை இறக்கி வைத்துவிடுகிறார். பார்பெராவுக்கும் அவள் தங்கைக்கும் பாடம் நடத்தும் சித்தியின் கொடுமைக்கு ஆளான, வறுமையால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்ட பொக்ரோவ்ஸ்கி என்ற பல்கலைக்கழக மாணவன், அவனது குடிகாரத் தந்தைக்கு அவன் மீது இருக்கும் பயபக்தியுடன் கூடிய பாசம், அவனால் பார்பெராவுக்கு ஏற்பட்ட இலக்கியப் பரிச்சயம், அவன் மீது பார்பெராவுக்கு உண்டான நேசம், அவன் இறந்தபின் அவளுக்கு உண்டான வெறுமை இவையெல்லாம் அந்தக் கடிதங்களில் சொல்லப்படும் நிகழ்வுகள். இதன் வழி நாவல் Nonlinear வகைமையையும் தொட்டுச் செல்கிறது. தேவுஷ்கின் தனது குடியிருப்பில் உண்ண வழியற்று இருக்கும் மனிதர்களை வகைப்படுத்துவன் மூலம் தான் நல்ல நிலையில் இருப்பதுபோலக் காட்ட முற்படுவதை என்னவென்று சொல்வது! சமூகத்தின் பாரபட்சமான வாழ்நிலைகளில் தொலைந்துபோகும் சாமானியனின் கனவுகள் மிகவும் பாவப்பட்டவை. இந்த வேறுபாட்டிலிருந்து புறப்படுவது குற்றம். பொக்ரோவ்ஸ்கியின் பாத்திரம் பின்னாளில் ரஸ்கோல்நிகோவ் என்ற பெயருடன் குற்றமும் தண்டனையும் நாவலில் வந்ததாகத் தோன்றுகிறது. சமூகத்தின் சித்திரமாக, மனத்தில் நிகழும் போராட்டங்களின் தத்துவ விசாரணையாக, போலித்தனத்தைத் தோலுரிப்பதாக இருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்கு நிகர் சொல்ல எதுவுமில்லை. கண்ணீரையே தந்தாலும் மீண்டும் மீண்டும் நம்மை அவரது நூல்களைத் தேடச் செய்யும் எழுத்துத் தவசி அவர். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை எனக்குத் தந்தவர் பழனிநாதன். தற்போது அச்சில் இல்லை. அச்சிட்டால் தருமாறு கேட்டிருக்கிறேன். வி.எஸ்.வெங்கடேசன் மொழியாக்கம். பக்கங்கள் குறைவு; பாவப்பட்டவர்கள் என்பதால் பாரம் அதிகம்.


Comments