சிறுகதை - அம்மாவின் புகைப்படம்

    

அம்மாவின் புகைப்படம்

வாட்சப், மெயில், சுயமி விவரங்கள் என்று ஒன்றுவிடாமல் தேடிக்கொண்டிருந்தேன். எதிலும் கிடைக்கவில்லை. எத்தனை சொந்தக்காரர்கள்! அவர்கள் யாரிடமாவது கேட்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். கேட்டால் நக்கலாகச் சிரிப்பார்கள். ஆனாலும் கேட்டு ஆகவேண்டும். ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. ஊரில் அக்கம் பக்கத்தில் கேட்டாலே போதும். ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரிடம் இருக்கும். அது அம்மாவின் புகைப்படம்.

     அம்மாவுக்குச் சீவிச் சிங்காரிக்க அவ்வளவாக ஆசை இருந்ததில்லை. ஆனால் எங்கே எந்த வீட்டு விசேசத்திற்குப் போனாலும் புகைப்படத்திற்கு நின்றுவிடும் வழக்கம் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோதெல்லாம் இதுபோலக் கல்யாண வீடுகளில், சடங்கு வீடுகளில் புகைப்படம் எடுத்தால் உண்டு. அதைத் தவிர ஸ்டுடியோவுக்குப் போய்ப் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு ஓய்ச்சல் ஒழிச்சல் இருந்ததில்லை அம்மாவுக்கோ அப்பாவுக்கோ. அப்பா நினைத்தால் எடுத்திருக்கலாம். ஆனால் இல்லை.      அம்மாச்சி வீட்டு ஆட்களிலேயே அம்மாதான் அழகு. ‘மூக்கும் முழியும் அப்பிடியே அவ அப்பத்தாவ உரிச்சு வச்சிருக்கு’ என்று அம்மா வீட்டுக் கிழவிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அம்மாவுக்குக் கழுத்து நீளமாக இருக்கும். நீளமாக என்றால் விகாரமாக இல்லை. அழகாக சிறு வளைவுடன், யானையின் துதிக்கை முடிவில் ஒரு வளைவு வருமே, அதுபோலச் சங்கப்புலவர்கள் சொல்லும் சங்கு வளைவுடன் இருக்கும். ஆனால் எல்லோரும் நெட்டக்கழுத்து, கொக்குக் கழுத்து என்று சொல்வார்கள். அதனாலேயே கழுத்தை வளைத்து மூடும்படி ரவிக்கை தைத்துப் போட்டுக்கொள்வாள். அமீது கடையில் கழுத்தை மூடும்படி ஆனால் இறுக்கிப் பிடிக்காமல் தைக்கச் சொல்லி வாங்கி வருவோம்.

     இப்படி மூடியாக இருக்கும் அம்மா புகைப்படம் எடுக்க மட்டும் எவர் வீட்டு நிகழ்விலும் தயங்கியதே இல்லை. கூடப்போகும் எங்களையும் கூப்பிடுவாள். நாங்கள் "வரவில்லை" என்று சொன்னால் அதைக் கண்டுகொள்ளாமல் அவள் போய் நின்றுகொள்வாள். அம்மாவைப்போல மற்ற பெண்கள் இல்லையா என்றால் இருந்தார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில நெருக்கமான இடங்களில் அப்படி நிற்பார்கள். அப்படியானால் அம்மா எல்லா மேடைகளிலும் நிற்கிறாளா? அதுவும் இல்லை. ஜேபி இருக்கும் விழாக்களில் விடாமல் நிற்கிறாள். இது பிறரை உறுத்தாமல் இருந்துவிடுமா என்ன?

     எனக்கு மீசை அரும்பிய, கூடவே ரோசமும் கூடிவிட்டிருந்த பருவம் அது.  பரிமளா அத்தை வீட்டுக் கல்யாணம். முத்துமீனாட்சி சித்தி, கல்யாணம் மாமா, சித்தி மகன் பிரசாத், வெங்கட்டு சித்தப்பா எல்லாரும் ஆளுக்கொரு வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அம்மாவும் ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள்.

     சித்தப்பா சித்தியைக் கையில் நிமிண்டிவிட்டுச் சொன்னார், "ஒங்க மாசிலா அக்காகிட்ட இப்பவே மொற செய்றது, தட்டு வக்கிறது, லொட்டு லொசுக்கு எல்லாம் கேட்டு வச்சுக்க. அப்பறம் அத நீயி மேடைலருந்து இங்கிட்டு இழுக்கிறது ஆகாத வேல"

     நான் அங்கே இருக்கிறேன் என்று சித்தி ஜாடை காட்டினாள் போல. "உண்மைதானடா பார்த்தி? ஒங்கம்மா மாசிலா பண்றது உனக்கே தெரியுமே?" தான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதுபோல என்னிடம் சொன்னார் சித்தப்பா

"ஆமாம் சித்தப்பா. அவங்களுக்கு யார்ட்ட எங்க எப்படி இருக்கணும்னே தெரியாது"

     இதைச் சொல்லும்போது நான் பல்லைக் கடித்ததைப் பார்த்து பிரசாத் சித்தப்பாவை முறைத்தான். கல்யாணம் மாமா மசமசவென்று வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் அம்மா எதையாவது சொல்ல வேண்டுமே? ம்ஹூம். எந்த எதிர்வினையும் இல்லை. அதன்பிறகு அம்மாவை நான் எங்கும் போகாமல் நிறுத்தி வைக்க நினைத்தாலும் சித்தப்பா சொன்னதுபோல முடியவே இல்லை.

     விழாக்கள் என்றால் சொல்ல வேண்டிய இன்னொருவர் ஜேபி. அவரைத் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள் ஊரில். அவர் தேச பக்தரோ, தொழிலதிபரோ, வேறு எந்தத் தலைவரோ இல்லை. அவர் எங்கள் ஊரிலேயே நன்றாகப் புகைப்படம் எடுக்கக்கூடிய புகைப்படக்காரர். மீனா ஸ்டுடியோவின் முதலாளிக்கு ஒரு நாளைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் ஜேபியைத் தங்கள் விழாக்களுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்பவர்களே அதிகம். ஜேபி முயற்சி செய்திருந்தால் சினிமாவிலேயே சாதித்திருக்கலாம் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். அவர் என்னவோ ஊரைத் தாண்டி எங்கும் போகவில்லை.

     அவர் புகைப்படம் எடுக்கும் முன்னால் மேடையில் இருக்கும் பின்னணியைச் சரி செய்வார். விழா நாயகர்கள் நடுவாந்திரமாக இருக்க வேண்டுமென்பதில் கணக்காக இருப்பார். அப்போதெல்லாம் பரிசுப்பொருள்கள் கொடுப்பது நண்பர்கள் மட்டுமே. மற்ற உறவினர்கள், சுற்றத்தார் எல்லாம் மொய் எழுதுவதோ, கையில் பணத்தைத் திணிப்பதோ இயல்பு. அதனால் பரிசு கொடுத்து அதைப் புகைப்படம் எடுப்பது ஒன்றோ இரண்டோ இருக்கும். வரிசை வைப்பது, சந்தனம் பூசுவது, நலுங்கு, சீர் செனத்தி வகையறாக்களை எடுப்பது முக்கியம். அதையெல்லாம் எடுத்த பின்பு மாப்பிள்ளை, பெண்ணின் அப்பா அம்மா உறவினர் என்று எடுக்கும்போது ஒன்றிரண்டு பேர் புகைப்படத்துக்கென்றே எல்லோர் கூடவும் நிற்பார்கள். அவர்களைத் தள்ளவும் முடியாது கொள்ளவும் முடியாது என்ற நிலையில் ஜேபியிடம் சொல்லிவைத்துவிடுவார்கள். யாரைக் கேமெராவுக்குள் கொண்டு வரலாம் வேண்டாம் என்பதை அவர் கண்கள் முதலில் ஒளிப்படம் எடுத்துவிடும். இப்போதிருப்பதுபோல டிஜிட்டல் கிடையாது. பிலிம் என்பதால் வீணாக்காமல் இருக்கவேண்டும். இத்தனை ரோல் என்று சொல்லிவிடுவார்கள். அதற்குள் அடக்க வேண்டும். அந்தக் கணக்கு ஜேபிக்கு நன்றாகவே தெரியும். சில நேரம் ஒரே விதமான படத்தை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டும் என்றால் வெறும் பிளாஷ் மட்டும் அடித்து ஏமாற்றுவார். கொஞ்சம் விவரம் தெரிந்த பையன்கள் பார்த்துவிட்டால் கண்ணடித்துச் சிரிப்பார்கள் அவரும் ப்ளாஷ் ஒளியால் பதிலுக்குக் கண்ணடிப்பார். ஆல்பமாக ஸ்டுடியோவில் இருந்து வரும்போது கல்யாண, சடங்கு, காதுகுத்து, பூணூல் கல்யாணம் என அந்தந்த வீட்டுக்காரர்கள் மனம் நிறைவடையும்படி இருக்கும்.

     ஆல்பங்கள் நெருங்கியவர்கள் வீடுகளுக்குச் சுற்றில் வரும். அதில் பார்க்கும்போதுதான் தெரியும் யார் யாரெல்லாம் வெட்டப்பட்டார்கள் என்று. எங்கள் வீட்டுக்கு வரும்போது அம்மாவை கலாட்டா செய்வோம்.

"அம்மா பத்து போட்டோவுக்காவது நின்னிருப்ப இல்ல? ஒண்ணக்கூடக் காணோமே?"

"அது இல்லாட்டி என்னடா? மாப்ள பொண்ணு நல்லா இருக்காகல்ல" என்பாள் அம்மா.

"அதுக்கு நீ எதுக்கும்மா அங்க போயி நின்ன?"

அதற்கு அம்மாவிடம் பதில் வராது. அப்பா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

     அம்மா தன்னுடைய கல்யாணத்துக்கு வந்தவர்களை அவர்கள் கட்டியிருந்த பட்டுப்புடவை, கொண்டை போட்டிருந்த லாகவம், உடன் அழைத்து வந்திருந்த பிள்ளைகள் யார் யார், அவர்கள் ஆசீர்வாதம் செய்தபோது என்ன சொன்னார்கள், மாமா என்ன சொன்னார், சித்தப்பா என்ன சொன்னார், அவர்கள் அப்போது என்ன நிறத்தில் சட்டை போட்டிருந்தார்கள், வெற்றிலை போட்டுக்கொண்டே இருக்கும் ராசாமணி வாயைத் திறக்காமல் எச்சில் தெறிக்கப் பேசியது உட்பட ஒன்றுவிடாமல் சொல்வாள். அவள் மனம் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒன்றை இப்படிச் சொல்லிச் சொல்லியே புத்தம் புதுசாக வைத்திருந்தது. அம்மா கதை சொல்லும்போது அப்பா வீட்டிலிருந்தால் எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். இத்தனைக்கும் இவர்கள் வீட்டார் சம்மதத்துடன் - சொந்தம் என்பதால் - காதல் திருமணம் செய்தவர்கள்.

     அம்மாவின் கல்யாணச் சேலையை எங்களுக்குத் தொட்டில் கட்டிப்போட்டதை அடிக்கடி பெருமையாகச் சொல்வாள். அம்மாவின் கிழிந்த அந்தப் பட்டுப்புடவை ட்ரங்குப் பெட்டியில் அந்துருண்டை வாசனையோடு மடித்துவைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெட்டியை அடிக்கடி அம்மா எடுத்துப் பார்த்துக்கொள்வாள். பூட்டிப் பத்திரப்படுத்தி ஏதோ பொக்கிசம்போலப் பாதுகாப்பாள். புகைப்படத்திற்கு ஆலாய்ப் பறக்கும் அம்மாவின் கல்யாண போட்டோ ஒன்றுகூட இல்லை. சின்னமனூரில் பிரபலமாக இருந்த ஸ்டுடியோவில் சொல்லி கல்யாண போட்டோ எடுத்ததாக அம்மா சொல்வதுண்டு.

     "போட்டோ வாங்கவே இல்லையா?" என்று கேட்டால் பதிலே சொல்ல மாட்டாள். இப்போது அந்த ஸ்டுடியோவே இல்லை. ஒரு நாள் விடாமல் தொணத்திக் கேட்டபின் சொன்னாள், "மாப்பிள்ளை வீட்டுல, அதான் ஒங்க தாத்தா வீட்டுல போட்டோ எடுக்கிறதா சொன்னாங்க. கருப்பு வெள்ளைப்படம்தான் அப்போ. ஸ்டுடியோவுல இருந்து வந்து போட்டோ எடுத்தவன் ரோல் வாங்க குடுத்த காசுல ஒரே ஒரு ரோல் வாங்கிருக்கான். மிச்சக் காசு, கேமெராவோட ஊரவிட்டுப் போயிட்டானாம். எடுத்த போட்டோவும் அவனோடேயே போய்டுச்சு"

     அம்மா சிறுமியாகப் பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரோடு எடுத்த புகைப்படம் ஒன்று சுவரில் தொங்குகிறது. அதிலும் அம்மாவின் கண்களும் கழுத்தும் மற்றவர்களைவிட எடுப்பாகத் தெரிகின்றன. அத்தை, சித்தப்பா கல்யாண போட்டோக்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. பெண்கள் அவரவர் கணவர் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர்களை ஒட்டி கூஜாக்கை ரவிக்கையோடு, பட்டுப்புடவை, நகைகள் அலங்கரிக்க நின்றிருந்தார்கள். இப்படி ஒரு புகைப்படம் அம்மாவுக்கு இருந்திருக்கக் கூடாதா?

     அப்பா உள்ளறையில் விட்டத்தைப் பார்த்தபடி இருக்கிறார். அவர் வேலையிலிருந்து நின்று சில ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வீட்டைப் பார்த்துக்கொள்ள வந்த பின்பு வேலைக்குப் போகவேண்டாம் என்று அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டேன். இந்த அம்மா ஓயாமல் உழைத்து உழைத்தே போய்ச் சேர்ந்துவிட்டாள். ஒரு நாள்கூடப் படுக்கையில் கிடக்காமல் திடீர் மாரடைப்பில் முந்தாநாள் மாயமாகிய அம்மா தன் முகத்தை மட்டும் ஒளித்துவைத்துவிட்டு, காணும் பொருளை, இடத்தையெல்லாம் அவள் நினைவுக்கென விட்டுச் சென்றிருக்கிறாள். நானும் அக்கா மீராவும் அம்மாவுக்குச் சாமி கும்பிட புகைப்படம் வேண்டும் என்று அலைந்துகொண்டிருக்கிறோம். எங்கள் கைகளில் ஆப்பிள், விவோ மொபைல் போன்கள் இருக்கின்றன. என்னுடைய மனைவியிடம், மாப்பிள்ளையிடமும் மொபைல் போன்கள் இருக்கின்றன. எங்கள் குழந்தைகள் முதற்கொண்டு அதில் விதவிதமாகப் புகைப்படம் எடுப்பார்கள். அதில் அம்மா புகைப்படம் ஒன்றுகூடவா இல்லை என்று நினைத்து வெட்கமாக இருந்தது. பழைய நாட்களில் கிராமங்களில் இறப்புக்குப் பின் இறந்தவரை நாற்காலியில் அமர வைத்துப் புகைப்படம் எடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வசதியிருக்கும் இந்த நாளில் நான்… ச்சே என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

     மூர்த்தி பெரியப்பாவும் வடிவு பெரியம்மாவும் வந்தார்கள். "பார்த்தீ" என்று கட்டிக்கொண்டார்கள். வழக்கமான அழுகை, ஆறுதல், ஓய்வுக்குப் பின்னால் பெரியம்மா, "மாசிலா மூணு கல்லு மூக்குத்தி போட்டு நின்னான்னா அப்பிடியே மீனாட்சியம்மனப் பார்த்தாப்போல இருக்குமே. ஏண்டா அவ போட்டோ ஒண்ண பெருசு பண்ணி வையிடா. அவளுக்கு போட்டோனா உசுராச்சே" என்று அன்னம்பாரினாள். எப்படா விழுவோம் என்று காத்துக்கொண்டிருந்த பழுத்த இலைகள் காற்றடித்ததும் பொலபொலவென உதிர்வதுபோலக் கண்ணீரும் கம்பலையுமாக வந்தது எனக்கு. பெரியம்மா ஆதரவாக என்னை முதுகில் தடவிக்கொடுத்தபடியே இருந்தாள்.

     துட்டி கேட்பவர்கள் வந்து போய் வீடு ஓய்ந்த நேரம் மீண்டும் புகைப்படம் தேடுதலைத் தொடங்கினேன். எங்கள் திருமணத்தின்போது எடுத்த போட்டோ இருக்குமே என்று அதையும் தேடிப் பார்த்தேன். அதிலும் அம்மாவின் நேரான முகம் இல்லை. எங்களை ஆசீர்வாதம் செய்யும் படம். அதுவும் முதுகுப்புறமாக இருந்தது. ஜேபியாக இருந்தால் சரியாக நிற்கவைத்து எடுத்திருப்பார். இது வேறு போட்டோகிராபர். அது மட்டுமில்லாமல் அம்மா போட்டோ பைத்தியம் என்று ஓர் அலட்சியம் எங்களிடம் இருந்ததாலேயே தேவையான போட்டோவைக்கூட எடுக்கவில்லை என்று இப்போது புரிகிறது.

     அப்பா கோபமாக என்றுமே பேசியதில்லை. அதேபோல அன்பாகப் பேசியதும் இல்லை. ஆனால் அம்மாவின் பேச்சும் அம்மாவைப் பற்றிய பேச்சும் இல்லாமல் ஒரு நாளும் முடியாது. இன்றோடு அவள் போய் நான்கு நாட்களாகிவிட்டன. நடந்து நடந்து வெடித்துப் பாளம் பாளமாக இருக்கும் அம்மாவின் பாதங்கள் நினைவில் வந்து எங்கள் நடையை இன்று தளரச் செய்கின்றன. எங்கள் பிள்ளைகளைச் சுமந்து சுமந்து "ஒரு பக்கம் தோள் வலிக்குது" என்று புலம்பிய அம்மாவின் சொற்கள் எங்களுக்குள் ஊமைக்காயமாகி வலித்தது.

     பூமிக்குள் கனன்றுகொண்டிருந்த தணல் எரிமலையாகி வெளியே குதித்து வருவதுபோல அந்த நிகழ்ச்சி இன்று மண்டைக்குள் கொதிப்பேறி என்னைச் சாம்பலாக்கும் உத்தேசத்தோடு வெளிவந்துவிட்டது.

     எங்கள் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்காக விருது வழங்கும் விழா ஒவ்வோராண்டும் நடைபெறும். சென்ற ஆண்டு நான் என்னுடைய மனைவி, குழந்தைகளோடு அம்மா, அப்பாவையும் அழைத்துச் சென்றேன்.  குழந்தைகளுக்கு விளையாட நிறைய அரங்குகள் இருந்தன. அதில் இருந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பாட்டி தாத்தாக்களோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் சித்து பாப்பாவும் அம்மாவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டது. அப்பா இதற்கு முன் சாதித்தவர்கள் புகைப்படங்கள், அலங்காரம் செய்யப்பட்ட விதத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரோடு வேலைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். அம்மா ஓட்டமும் நடையுமாய் வந்தாள். நான் பாப்பா அழுகிறாளோ? எதுவும் பிரச்னையோ என்று நினைத்து "இதோ வருகிறேன்" என்று ஒருங்கிணைப்பாளரிடம் சொல்லிவிட்டு அம்மாவிடம் வந்தேன். அம்மாவின் கண்களில் அப்படி எதுவும் பிரச்னை இருப்பதுபோலப் பதட்டம் இல்லை.

"என்னம்மா?"

"டே பார்த்தி, அதோ அந்த சவுக்கு மரத்துக்கிட்ட அலங்கார விளக்கு வச்சிருக்காங்களே..."

"ஆமாம்மா, இப்ப அதைக் கேக்கவா இப்டி ஓட்டமா வந்தீங்க?"

"ஏம்பா பார்த்தி, அந்த எடத்துல நிக்கற மாதிரி ஒங்க அப்பாவையும் என்னையும் சேந்தாப்போல ஒரு போட்டா எடுடா. அதான் ஒங்கிட்ட நல்ல போன் இருக்கில்ல"

     எனக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது. என் மனைவி பின்னால் இருந்து பார்த்து "கூட்டிட்டு வந்தேல்ல, அனுபவி" என்பதுபோலச் சாடை காட்டினாள்.

     நான் பல்லைக் கடித்து உறுமினேன். "இந்தப் பயித்தியம் ஒங்கள விடவே விடாதா? எங்க போனாலும் அசிங்கப்படுத்திட்டு. இனிமே எங்கயும் கூட்டிட்டு வரக்கூடாது"

     அம்மா ஒன்றும் பேசாமல் பாப்பா விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றாள். பாப்பாவுடன் இருந்த அப்பா, அம்மாவிடம் என்னவோ சொன்னார். நான் அதன் பின் விழா ஏற்பாடு அது இது என்று களைத்துப்போனதில் இதை மறந்துபோயிருந்தேன்.      அப்படி என்ன கேட்கக்கூடாத ஒன்றை அம்மா கேட்டுவிட்டாள்? அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்

     அங்கே பெரியவர்களைப் பெரும்பாலும் பேரக்குழந்தைகள் படம் எடுத்தார்கள். இளம் கணவன் மனைவியர் சுயமிப்படங்கள் எடுப்பதும், குழந்தைகள் இருப்பவர்கள் வீட்டில், ஆண் தன்னுடைய மனைவி, மக்களைப் படம் எடுப்பதுமாக எங்கும் புகைப்படம் புகைப்படம் புகைப்படம். இதில் அம்மாவுக்கு இருந்த ஆசை என்ன பாவம் பண்ணியது? ஒரு சின்ன விஷயத்தைப் பிறர் குத்திக் குத்திக் காட்டியதாலேயே பெரிய குற்றமாக மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு பிறர் நினைப்புக்கு அம்மாவின் மனத்தைக் குதறிவிட்ட கைகள் என்னுடையது என்று புரிகிறது.  அத்துடன் இன்னொன்றும் இப்போது உறுத்துகிறது. அம்மா அப்பாவுடன் சேர்ந்து தனியாக நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்டுக் கேட்டது அதுதான் முதல்முறை. இப்போது நான் பெரும் குற்றவாளியாக என்னை உணர்ந்தேன். அதற்குப் பின்னால் அம்மா எங்கேயும் வெளியே வந்ததில்லை. வீடு, பேரக் குழந்தைகள், அப்பா என்பதோடு அவள் உலகம் முடிந்துவிட்டது.

     நூற்றுக்கணக்கான எங்கள் சுயமிப் படங்களில் அம்மா இல்லாத வெற்றிடம் எங்களைக் கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தது. நான் போனை வைத்தபடி கண்ணீர் விடுவதைப் பார்த்த மீரா போனைப் பிடுங்கிப் பார்த்தாள். அதில் அழ எதுவும் இல்லையென்று திருப்பிக் கொடுத்துவிட்டு “என்ன?” என்றாள்.

"போட்டோ எல்லாம் பாத்தியா?"

"அதுல என்ன இருக்குனு அழுதுட்டு இருக்க? அம்மாவை மறக்குறது நம்மால முடியாதுதான் பார்த்தி"

"மீரா, இவ்வளவு படத்துல ஒன்னுல கூட அம்மா இல்ல" நான் தலையைக் குனிந்துகொண்டு அழுவதை மறைத்தேன்.

மீராவின் குரலும் உடைந்தது. "என்கிட்டயும் இல்ல பார்த்தி. இப்டி ஆகும்னு நெனைக்கவே இல்ல. எங்க காலேஜ் விழாவுக்கு அவங்க வந்தப்போ அவங்கள போட்டோ எடுக்கக் கூப்பிட்டாலும் வர மாட்டேன்னுட்டாங்க. அதுகூட என்னோட தப்புதான். வீட்டுலருந்து கிளம்புறதுக்கு முன்னயே அவங்ககிட்ட, “காலேஜ்ல வந்து போட்டொ போட்டொன்னு எம் மானத்த வாங்கிறாதம்மா” ன்னு சொல்லிட்டேன். அந்த நாள்ல என் கூட நின்ன யாரும் இப்ப தொடர்புலயே இல்லை. எனக்கு எல்லாமா இருந்த அம்மா போட்டோவுல இல்ல. அம்மானா எப்பவுமே நம்ம கூட இருக்குறவங்கனு தனியா கவனிக்காமயே இருந்துட்டேன்.” மீராவின் குரல் உடைந்து தழுதழுத்தது. கொஞ்ச நேரம் கழித்து நிமிர்ந்தாள். “அப்பாட்ட போயி கேட்டுப்பாக்கலாம்" மீரா சொல்லிவிட்டு அப்பாவின் அறைக்குப் போக ஆரம்பித்தாள். நானும் அவளுடன் சேர்ந்துகொண்டேன்.

அப்பா எங்களைவிட உடைந்துபோயிருந்தார். பேசாமல் இருப்பவர்களிடம் சொல்லப்படாதவைகள் நிறைய இருக்கும். நாங்கள் எதையும் வற்புறுத்திக் கேட்டதில்லை. அப்பா கேட்டதை வாங்கித் தருபவராகவே இருந்துவிட்டார்.

"அப்பா"

"ம்ம். என்னப்பா இப்ப யாராரு வீட்டுல இருக்காங்க?"

"நம்ம வீட்டு ஆளுங்க, சம்பந்தகாரங்க மட்டும்தாம்பா"

"விசாரிக்க வரவுக வந்துட்டுதே இருப்பாக. நீங்க புள்ளைகள கவனிச்சுக்கங்க"

"அப்பா" பேசப்பேச மீரா அழுதாள். அப்பா மீராவின் தலையைக் கோதிவிட்டார்.

"அப்பா, அம்மாவோட போட்டோ இருக்காப்பா"

இதைக் கேட்கும்போது நான் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். அப்பாவின் கண்கள் கேமெராவுக்கு நிகராகக் கூர்மையாக எதையும் கட்டம் கட்டும். அதைச் சந்திக்கும் துணிவு எனக்கு இல்லை.

அப்பா நிதானமாகச் சொன்னார், "அம்மாவோட ட்ரங்குப் பெட்டில பாரு"

நாங்கள் அவசர அவசரமாக அம்மாவின் பெட்டியைத் திறக்க ஓடினோம். பெட்டியில் அம்மாவின் கலியாணப் புடவை, சீமந்தப் புடவை, உடைந்த மூக்குத்தி ஒரு பிளாஸ்டிக் உறையில் தொப்புள் கொடியைச் சுற்றிய சிறு தாயத்து, பெண் குழந்தைக்குப் போடும் தங்க அரைநாண், ஒரு தடித்த ஆல்பம் இருந்தது.

ஆல்பத்தைப் பிரித்தேன். அம்மா ஆல்பம் முழுவதும் அழகழகான புடவைகளில் இருந்தாள். அவள் கண்கள் சிரித்தபடியே இருந்தன. அவள் மட்டும் எப்படித் தனியாக இத்தனை மேடைகளில்?

நாங்கள் கடைசியாகப் பார்த்த புகைப்படம் திருமணமான புதிதில் எடுக்கப்பட்டது போல மிக இளமையான படம். மாசிலாமணி ஜெயப்ரகாசம் என்று பெயரிடப்பட்ட அப்புகைப்படத்தில் அம்மாவும் அப்பாவும் ஒன்றாக நின்று கடற்கரைப் பின்னணியில் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அப்பாவைப் பார்த்தோம். ஜேபி என்கிற ஜெயப்ரகாசம் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார்.

14.12.22

 

Comments