பஃறுளி - நீர் மிகின் சிறையும் இல்லை
இன்று பாய் பெஸ்டிகள், க்ரஷ்கள் என்று சர்வ சாதாரணமாகப்
பேசிக்கொள்கிறார்கள். (பல வீடுகளில் இன்றும் அவை தடை செய்யப்பட்ட
வார்த்தைகள் என்பது வேறு கதை.) ஆனால் காணாமலே காதல், சொல்லாமலே காதல் என்று
அஜித்துகளும் இதயம் முரளிகளும் சுற்றிக்கொண்டிருந்த காலம் தொண்ணூறுகள்.
அந்தக் காலகட்டத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கோலாகலமாகத்
திருமணம் நிகழ்ந்து கணவன் வீட்டினரே தனிக்குடித்தனம் வைத்து அழகு பார்த்த
மாயக்கண்ணன், கோமதியின் கதையில் உண்டாகும் 'கிரஷ்' இந்த நாவல்.
இதன்
பிண்ணனியை அமைத்திருக்கும் விதம்தான் கதையை மெருகூட்டுகிறது எனலாம். இடம்,
காலம், துணை மாந்தர்கள், வசனம் இவற்றை அளந்தெடுத்ததுபோலப் பின்னி
வைத்திருக்கிறார் நர்சிம். அப்படி நச்சென்று தருவது அவருக்கு பிரேம விலாஸ்
அல்வாபோல என்பது அவரது வாசகர்கள் நன்கறிவார்கள். களம் மதுரையில் தொடங்கி
குமரி முனையைத் தொட்டு மீண்டும் மதுரையில் நிறைகிறது.
பட்டப்பகலில் ஐந்து பேரால் கொலை செய்யப்பட்ட வில்லாபுரம் கவுன்சிலராக
இருந்த தோழர் லீலாவதி மற்றும் 'மதுரைன்னாலே அவருதாம்பே' என நடிகராகக் கொண்டாடப்பட்டு அரசியலில்
மய்யம் ஆன கமலஹாசன் காலத்தின் உறைவிடமாகிறார்கள்.
துணை
மாந்தர்கள் சில நேரங்களில் கதாநாயகனை விடவும் மனத்தில்
ஒட்டிக்கொள்வார்கள். யாருப்பா இந்த தேவராஜ்? என்று விசாரித்துவிட்டு வரத்
தோன்றுமளவுக்கு ஒரு நண்பன். இன்னொரு நண்பன் ஆய்வுப்புலி. அப்பாவை என்றும் நெஞ்சில்
நிறுத்தும் எழுத்தாளர், இங்கும் அதையே செய்கிறார். மகனை வைவதைவிட, மகனின்
நண்பனிடம் பேசும் வழக்கம் அன்றைய அப்பாக்களிடம் இருந்ததை கதை கதையாகச்
சொல்லிக்கொண்டிருக்கிறார். தோழர் செல்வம் ஒரு கையால் டீ கிளாசைப்
பிடித்திருக்கும் காட்சி, கோமதியுடன் பணியாற்றும் தெத்துப்பல் டீச்சர்,
ஹாங்யா உட்பட அனைவரும் மதுரையோடும் கதையோடும் உலவும் வடிவங்கள்.
அப்புறம் மாயக்கண்ணனுக்கு வில்லனாகத் தோன்றும் ஏஹெச்எம் மாதவனைச் சொல்லாமல்
இருக்க முடியுமா? கண்ணன் குரோதமாக நினைத்தாலும் மாதவன் கோமதியின் பார்வையில்
நாயகனாகும் ஒரு புள்ளி கதையைத் தீர்மானிக்கிறது. எதிர்நிலைக் கதாபாத்திரம்
இங்கே சூழல்தான். வசனங்களில், பெயர்களில் காணப்படும் உள்ளூர் வழக்கம்,
பட்டப்பெயர், கவித்துவம் என நிறையச் சொல்லலாம். "ஹோட்டல் என்றாலே 'ஓட்டல்' என்பதுபோல் தோழர் என்றாலே லீலாவதி" என்பது சிறு
உதாரணம். புளியமரம், அடிகுழாய், புல்லட் எல்லாம் தன் பங்குக்கு வித்தை
காட்டுகின்றன.
கணப்பித்தம்
என்பார்கள். அப்படியான கணங்கள் அடர்த்தியாகும்போது சுழலாகி உள்ளே
அமிழ்த்தும். அமிழும் ஆண்மகனைப் பெரும்பான்மையான பெண்கள்
ஏற்றுக்கொள்வார்கள். ஆண்கள்? இங்கே
அத்தி
பூக்கிறது. ஊரே வியக்கும் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கும் கண்ணனின்
கொந்தளித்த மனம் எப்படித் தெளிந்து அன்பைப் பிரதிபலித்தது என்பது
முதிர்வின் பயணம். கதை முடிவு இப்படியில்லாமல் வேறு எப்படித்தான் இருக்க
முடியும் என்று எண்ணினாலும் சோகம் இழையோடவே செய்கிறது. தண்ணீருக்காகப்
போராடிக் கொலையான லீலாவதியில் தொடங்கி தண்ணீர் வெள்ளத்தில் முடியும்
பஃறுளி, காலத்தின் ஒரு துளியிலிருந்து பல்கிப்பெருகி மனத்தை
ஆக்கிரமிக்கிறது. வண்ணதாசன் அவர்களின் ஓவியம் கதைக்குப் பொருந்தி அழகு செய்கிறது. தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் ரசிகப்படைகளுடன் பல விருதுகளும் எழுத்தாளரை அடையட்டும். நலம் சூழ வாழ்த்துகள் நர்சிம்.

Comments
Post a Comment