கற்கை நன்றே - நீதியின் ஒளியில் எனது பயணம் - நீதியரசர் ஏ.கே.ராஜன்
அறத்தின் ஒளி
சட்டத்தில் மட்டுமல்லாது சூழலையும்
அறிந்துகொள்ளும் நுணுகிய அறிவும் துணிச்சலும் நேர்மையும் நீதியைப் பெற்றுத்தருவதற்கு
அடைப்படைத் தேவைகள். இதை "நீதியின் ஒளியில் எனது பயணம்" என்ற இந்த நூலைப் படித்து முடித்தபின் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு
படியிலும் பின்பற்றப்படவேண்டிய, “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்” என்ற வள்ளுவர்
சொல்லை வாழ்வு நெறியாகக் கொண்டிருக்கிறார். நீதியரசர் ஏ.கே.ராஜன் மாணவராக இருந்தபோதும்
தனக்குச் சரியென்று தோன்றியதைச் செய்திருக்கிறார்; அல்லாதவற்றைக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்;
உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருந்திருக்கிறார்.
இந்த நூலில் தன்னுடைய சொந்த ஊரான சிலுக்குவார்பட்டி வாழ்விலிருந்து தொடங்கி
சென்னையில் குடியேறியது, பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு, வழக்கறிஞர் வாழ்வு, நீதிபதியாதல்,
வழக்குகளைச் சந்தித்த விதம் என்று அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிரார். சிலுக்குவார்பட்டியைப்
பற்றி எழுதும்போதே அந்த ஊர் மக்கள் எந்தக் கொம்பனாக இருந்தாலும் தவறாகப் பேசினால்
எதிர்த்துக் கேட்கும் குணம் உடையவர்கள் என்றும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும்
அறிமுகப்படுத்துகிறார். தானும் அறிமுகமாகிக்கொள்கிறார்.
சென்னையின் சில பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்தது பொருத்தமில்லாமல்
இருப்பதையும் தீர்ப்புகள் தமிழில் எழுதவேண்டும் என்று ஆணை வந்த பிறகு சில ஆங்கிலச்
சொற்களுக்குத் தமிழில் சரியான சொற்கள் கிடைக்காமல் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
வாதத்தில் திறமை மிக்க வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் பலரை அறிமுகம் செய்கிறார். தனக்கு
ஒரு சட்டம் பற்றி முழுமையாகத் தெரியாது என்று வழக்கறிஞரிடமே கூறி, அதனைத் தனக்கு விளக்கும்படிச்
சொல்லியிருக்கிறார். வியப்பாக இருக்கிறது.
சட்ட மேற்படிப்பான M.L தேர்வு எழுதுவோரில் 100/100 பேரும் தேர்ச்சியடைய
மாட்டார்கள் என்றும் அதற்குக் காரணம் விடைத்தாள் திருத்துவதே என்றும் எழுதுகிறார்.
இந்தப் பிரச்சினை துணைவேந்தர்களுக்கே தெரியாத நிலை. இவருடைய அண்ணன் சென்று துணைவேந்தரிடம்
விளக்கியபின்பு Double valuation முறை அமலுக்கு வந்திருக்கிறது. துணைவேந்தர் கி.லட்சுமணசாமி
முதலியார், பொறியியல் கல்வி இயக்குநர் முத்தையா மற்றும் சில சிண்டிகேட் உறுப்பினர்கள்
போன்றோர் இந்த முடிவு எடுப்பதற்குக் காரணமானவர்கள். தான் கண்ணால் காணும், நடப்புகளால்
அனுபவிக்கும் சிக்கல்களை எங்கே கேட்க வேண்டுமோ அங்கே கேட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு
கேட்பதால் தனக்குப் பின்வருவோரும் அந்த உரிமைகளால் பயனடைவார்கள்.
ஒரு தீர்ப்பை எழுதுவதற்கு முன் அவர் நீதியை
அடைவதில் மேற்கொள்ளும் முனைப்பே, அவரை நீதியின் ஒளியில் பயணிக்க வைத்திருக்கிறது.
அதற்கு அவர் பகிர்ந்திருக்கும் வழக்குகளும் தீர்ப்புகளும் சாட்சி.
மாணவராக இருந்தபோதே சர்வதேச சட்டத்தில் பாட்னாவில் நடந்த மாதிரி நீதிமன்றத்தில்
இவர் தீர்ப்பு எழுதுகிறார். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் 1976ஆம் ஆண்டு இந்திய
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து “தனித்த பொருளாதார எல்லையை” நிர்ணயிக்கிறது
இந்தியா. 1973ஆம் ஆண்டு இவர் கூறிய அந்தத் தீர்ப்பில் இருந்த “கடல் எல்லை 12 மைல்கள்”
என்பது 1982ஆம் ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு
இன்றுவரை அதுவே சர்வதேசச் சட்டமாக இருக்கிறது.
இன்னொன்று, சட்டங்கள் சொல்வதை நடைமுறைப்படுத்தும்போது உண்டாகும் நடைமுறைச்
சிக்கல்களைக் களைவது. அதற்கு உதாரணமாக முன் பிணை வாங்குவோர்களை நீதிமன்றத்தில் நிறுத்த
காலக்கெடு இல்லாமலிருந்தது. அதற்குக் காலக்கெடு இருக்கவேண்டும் என்று கெடு விதித்து,
தீர்ப்பெழுதி நடைமுறைப்படுத்தியதைச் சொல்லலாம். நீதிமன்றப் பணியாளர்களுக்கு பென்சன்
உடனுக்குடன் கிடைக்கும்படி செய்திருக்கிறார். இன்னும் பல இதுபோல நீள்கின்றன.
நீதியின் ஒளி பாதிக்கப்பட்டவர்கள் மேல் பாய்கிறதா என்பதில் முழுமையான
கவனத்தோடு அவர் பயணம் இருந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக, பெரியகுளம் வழக்கு, மருத்துவர்
பொய் சாட்சி சொன்ன வழக்கு என்று பல வழக்குகள் இந்த நூலில் இருக்கின்றன. பல வழக்குகளின்
திருப்புமுனை மர்ம நாவலுக்குரியது. வழக்குகளை எந்த அளவுக்குச் சொல்ல வேண்டுமோ அந்த
அளவோடு நிறுத்திக்கொள்வதிலும் அவர் திறனுடன் எழுதியிருக்கிறார்.
நீதிபதிகளாகவே இருந்தாலும் குடிநீர்க் குழாய் இணைப்புக்கு மெனக்கெட வேண்டியதும்,
பணி மூப்பில் ஏற்றத்தாழ்வு, மலை மறைவுப்பகுதியான தங்கள் ஊருக்கு நீர் வரத்துக்கான திட்டத்தை
அரசு வழங்கியும் அதிகாரிகள் இன்னும் கிடப்பில் போட்டிருப்பது எனப் போராட்டங்கள் இருக்கவே
செய்கிறது.
இந்த நூல் நீதியின் மேல் ஒளி பாய்ச்சுகிறது. உண்மையைத் தேடச் சொல்கிறது.
நேர்மை இருந்தால் உன் சொல் வெல்லும் என்கிறது.

Comments
Post a Comment