கற்கை நன்றே - பெயர் தெரியாத நண்பனிடமிருந்து - இவான் துர்கனேவ்
ஓர்
உறவு வாய்ப்பது தற்செயல். சானின் அரசு வேலையில் சேரும் முன்பாகச் சில மணி நேரம் உல்லாசமாக இருப்பதற்காக பிராங்க்ஃபட் செல்கிறான். அங்கிருக்கும்
மிட்டாய்க்கடையில் இனிய ஜெம்மாவைச் சந்திக்கிறான். அவள் தம்பியைக் காப்பாற்றியதால்
அவள் குடும்பத்துடன் விருந்தில் கலந்துகொண்டு ரயிலைத் தவறவிடுகிறான்.
ஜெம்மாவுக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது
என்று அறியும் போது லேசாக மனத்தில் கீறல். அப்போது அவன் அறியவில்லை அவள் மீது தனக்கிருக்கும்
நேசத்தை. ஆனால் அவளுக்கு ஒரு அவமானம் என்றால் ஒத்தைக்கு ஒத்தை என்று சண்டைக்கு (ட்யூயல்)
போகிறான். மணமகன் ஹெர் கிளியூபர் அவள் அவமானப்பட்டதைக் கண்டும் காணாமல் இருக்க, போரிடும்
சானின் ஜெம்மா, அவள் தம்பி, வேலைக்காரக் கிழவன் அனைவரையும் கவர்ந்துவிடுகிறான். ஹெர்
கிளியூபரை வேண்டாம் என்று மறுத்துவிடுகிறாள்
ஜெம்மா.
சானின், ஜெம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும்
காதலை உணர்கிறார்கள். தங்கள் காதல் திருமணமாக அரங்கேற வேண்டும் என்பதற்காகத் தன் சொத்துகளை
விற்க எண்ணுகிறான் சானின். ஜெம்மாவோடு வாழப்போகும் வாழ்வே அவனை உந்த, அவன் தன் நண்பன்
போலஸவின் மனைவியிடம் சொத்துகளை விற்பதற்காக வெஸ்பாதென் செல்கிறான். அங்கே சபலத்தால்
சறுக்கியவன் எழ வாய்ப்பே கிடைக்கவில்லை. எந்த ஜெம்மாவுக்காகத் தனது பூர்வீக நிலத்தை
விற்க எண்ணினானோ, அவளைத் துறந்து நண்பனின் மனைவி மரியா நிக்கலாயோவ்னாக்கு அடிமையாகும்படிச் சலனம் அவனை ஆட்கொண்டது.
அவன் மீண்டு வந்து பார்க்கும்போது யாரும் பிராங்க்பர்ட்டில்
இல்லை. 52 வயதில் மனித குலத்தின் பொய்மையையும் வீழ்ச்சியையும் சிந்தித்தபடி உறங்காமல்
இருக்கும் இரவில் ஜெம்மா காதலை உறுதி செய்து பரிசாக அளித்த செம்மணிச் சிலுவையை அத்தனை
காலம் கழித்துப் பார்க்கிறான். அவள் இருக்கும் இடத்தை நண்பன் வழியாகத் தேடிக் கடிதம்
எழுதுகிறான். அவள் பதில் அவன் சுமக்கும் சிலுவையை இறக்கி வைக்கிறது. ஜெம்மாவின் மகளுக்குத்
திருமணப்பரிசாக ஜெம்மா அளித்த சிலுவையை பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைக்கிறான். அவனிடம்
ஜெம்மாவின் மீதான காதல் பத்திரமாக இருக்கிறது. இருந்து என்ன பலன்? ஒரு சலனம் அதள பாதாளத்தில்
அவனைத் தள்ளிவிட்டதே.
இவான் துர்கனேவ் நீர்க்குமிழிக்கு வண்ணம் தீட்டியிருக்கிறார். 'அய்யோ உடையப்போகிறதே உடையப்போகிறதே' என்று மனம் அல்லாடுகிறது. சானின் தடுமாறும் கண நேரம் பலருக்கும் வாழ்வில் நேர்வதுதான். அது காதலுக்காக மட்டுமே இருக்கும் என்பதில்லை.

Comments
Post a Comment