கற்கை நன்றே - தந்தையும் தனயர்களும்
தந்தையும்
தனயர்களும் - இவான் துர்கனேவ்
தந்தையர் கண்டித்துக்கொண்டே இருப்பதும், மக்கள்
அதைப் பரிகசித்து ஒதுக்குவதும் தலைமுறைகளின் தள்ளாட்டம். ஒரு கட்டத்தில் தந்தையர் தம்முடைய
பிள்ளைகளிடம் விட்டுக்கொடுக்க முன்வருவர். அதேபோலப் பிள்ளைகள் தம்முடைய தந்தையருக்காகத்
தம்முடைய உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவர்களுக்காக அவர்கள் விரும்பியதைச் செய்வார்கள்.
பழமை பாராட்டுவது ஒரு தலைமுறை என்றால் அதை மறுப்பது
பின்வரும் தலைமுறை. இவான் துர்கனேவ் இதனைக் கருவாகக் கொண்டு எழுதிய நாவல் ‘தந்தையும்
தனயர்களும்’. பூ.சோமசுந்தரம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளரின்
குறிப்பு இணையம் வரை தேடியும் கிடைக்கவில்லை. காணும் அனைத்தையும் மறுக்கும் மறுப்புவாதத்தின்
பிரதிநிதியாக (நிஹிலிஸ்ட்) பஸாரவ் என்ற இளைஞன் இந்த நாவலின் நாயகனாக வருகிறான். அவன்
ஒரு மருத்துவன். ஆய்வு செய்பவன். அவனது கருத்துகளில் ஈடுபாடு கொண்ட அவன் நண்பன் அர்க்காதி.
ஒரு விடுமுறைக்கு வசந்த காலத்தில் அர்க்காதியின் கிராமத்துக்கு வருகிறான் பஸாரவ். அவர்கள்
வருகைக்காகக் காத்திருக்கும் அர்க்காதியின் தந்தையிடமிருந்து (நிக்காலாய் பெத்ரோவிச்)
நூல் தொடங்குகிறது.
இவான் துர்கனேவ் ஒரு கவிஞர்; உலகம் வியந்து
பார்த்த ஒரு காதலர்; பெரும் பணக்காரர்; தனது பண்ணையில் குடியானவர்கள் நடத்தப்படும்
விதத்தைப் பார்த்தவர்; தந்தையின் அன்பு கிடைக்கப் பெறாதவர்; தாயின் கண்டிப்பில் வளர்ந்தவர்.
அவருக்குத் தந்தையின் அன்பு குறித்து எதிர்பார்ப்பு இருந்திருக்குமோ? அர்க்காதி, பஸாரவ்
இருவரின் தந்தையர் காட்டும் அன்பு அப்படி எண்ண வைக்கிறது. இதில் இராணுவக் கட்டுப்பாட்டுடன்
இருக்கும் அர்க்காதியின் பெரியப்பா ‘பாவெல் பெத்ரோவிச்’ முன் தலைமுறையை முன்னிறுத்தக்
கட்டமைக்கப்பட்ட பாத்திரம்.
அந்தக் காலத்தில் இருவர் நேருக்கு நேராகச்
சண்டைக்கு அழைத்துத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும் “ட்யூயல்” என்ற வழக்கம் இருந்திருக்கிறது.
“the Duel” என்ற தலைப்பில் ஆன்டென் செகாவ், அலெக்ஸாண்டர் குப்ரின் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.
அப்படி ஒரு Duel இல் பஸார்வ்’வும் பாவெல் பெத்ரோவிச்’சும் துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார்கள்.
காயமடையும் பாவெல்லுக்கு பஸாரவ் மருத்துவ உதவி செய்கிறான். காரணம் இருவருக்குமான கொள்கை
மோதல் மட்டுமா? ஃபேனிச்காவும் காரணம். வயதான நிக்கலாய் பெத்ரோவிச்சின் காதலி ஃபேனிச்கா.
இவர்களுக்குக் குழந்தையும் இருக்கிறது. ஃபேனிச்காவின் அலட்டலில்லாத அழகு பஸாரவ்’வைக்
கவர்கிறது. பாவெல் அவளைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்? அங்கே முட்டிமோதி வந்தது
ட்யூயல். எதிர்வாதம் செய்யும் பஸாரவ் பாவெல்லுக்கு மருத்துவ உதவி செய்து காப்பாற்றுகிறான்.
கிழவர் வெட்கமடைகிறார்.
இளைஞர்களின் பெருந்தன்மையைப் பல இடங்களில்
உணரவைக்கிறார் துர்கனேவ். உலகறிந்த காதலர் தனது நாயகர்களை விட்டுவிடுவாரா? எல்லாவற்றையும்
மறுக்கும் பஸாரவ் காதலை மறுக்கமுடியாமல் தவிக்கிறான். அதின்த்சோவா சாமனியப் பெண் என்றாலும்
இறந்துவிட்ட கணவரின் சொத்துகளால் சீமாட்டியாக வாழ்கிறாள். அவளை பஸாரவ் விரும்புகிறான்.
டைபாய்டு நோயாளியின் உடலை அறுத்துப் பார்க்கும்போது பட்ட காயத்தால் அவனுக்கும் தொற்று
உண்டாகி சாகக்கிடக்கும் அவன் உயிர் கடைசியாக அவளைக் கண்டு அமைதியாகிறது .
பஸாரவ் என்ற இளஞனின் பாத்திரம் நம்மிடம் துயரத்தையும்
கேள்விகளையும் விட்டுச்செல்கிறது. பழமையின் உரு பாவெல் பெத்ரோவிச், தன் தம்பியிடம்
ஃபேனிச்காவைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார். அவள் உயர்குலம் அல்ல என்றாலும் அவளை
ஏற்றுக்கொள்கிறார். இது பஸாராவ் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றமா?
கோழி, குருவி, மலை அனைத்தும் துர்கனேவின் படிமங்கள்.
நிக்கலாய் பெத்ரோவிச் மகன் வரவுக்காகக் காத்திருக்கிறார். ஓர் இடம் தங்காமல் அலையும்
கோழி அவர் அருகே நடமாடுகிறது. கொஞ்சமும் அன்பின்றி அழுக்குப் பிடித்த பூனை அவரைப் பார்க்கிறது.
வெயில் பொசுக்குகிறது. நீண்ட காலம் காணாமல் ஏங்கும் தந்தையின் மன நிலை இது. கிராமத்துக்கு
வரும் வழியில், அர்க்காதிக்கும் பஸாரவ்வுக்கும் வசந்தகாலக் காட்சிகள் இன்பத்தை அளிக்கின்றன.
இது அவர்கள் மனநிலை. இப்படி நாவலில் காட்சிச் சுவை காட்டும் இடங்கள் பல.
மனித எண்ணங்களை துர்கனேவ் எளிமையாகக் கையாள்கிறார்.
ட்யூயலுக்குபின் பாவெல், பஸாரவ் இருவருக்குமிடையே ஒரு மௌனம் நீடிக்கிறது. ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அங்கே துர்கனேவ் இப்படி எழுதுகிறார்:
“இருவருக்குமே ஏதோ போல் இருந்தது. அடுத்தவன்
தன்னைப் புரிந்துகொள்கிறான் என்று இருவரும் உணர்ந்தார்கள். நண்பர்களுக்கு இந்த உணர்வு
இனியது. நட்பு அற்றவர்களுக்கோ மிகவும் கைப்பானது. அதிலும் விளக்கம் தெரிவிக்கவோ விலகிப்போகவோ
முடியாதபோது”
இப்படிக் காலத்தால் மாறாத உணர்வுகளொடு “தந்தையும் தனயர்களும்” நூல் பஸாரவின் துயரமான முடிவுடன், அவன் முடிவோடு இந்த உலகம் நின்றுவிடவில்லை என்று சொல்வதற்காகவே பிறர் வாழ்க்கைக் குறிப்புகளுடன், எந்த நிலையிலும் உலகம் சுற்றுவதை நிறுத்துவதில்லை என்பதுபோலக் கதையைச் சொல்கிறார்.
பஸாரவ் புதைக்கப்பட்ட கல்லறையை “மனிதன்
தொடுவதில்லை, விலங்குகள் மிதிப்பதில்லை. பட்சிகள் மட்டுமே அதன்மேல் அமர்கின்றன. உயரத்தில்
பாடுகின்றன” என்று விவரிக்கும் துர்கனேவ், பக்கத்துக் கிராமத்திலிருந்து இரண்டு தொண்டு
கிழவர்கள் கணவனும் மனைவியுமாய் அந்தக் கல்லறைக்கு முன்னால் முழந்தாள் மண்டியிட்டு விழுந்து
குமுறி அழுவார்கள் என்று சொல்லிக் கதையை முடிக்கிறார். பந்தந்தின் நெருப்புச் சூடு
கண்களில் வெக்கையாய் இறங்குவதைத் தவிர்க்க முடியாது நமக்கும்.
கவிஞனல்லவா! காட்டிவிட்டான் அவன் வித்தையை.
07.11.23

This comment has been removed by the author.
ReplyDeleteவாய்ப்பிருந்தால் எழுத்துப்பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.
ReplyDeleteசாமனியப் பெண்❌ - சாமானியப் பெண்✅
இளஞனின் பாத்திரம்❌ - இளைஞனின் பாத்திரம்✅
உணர்வுகளொடு ❌ - உணர்வுகளோடு ✅
பந்தந்தின் நெருப்புச்❌ - பந்தின் நெருப்புச்✅
பராட்டுவது ஒரு❌ - பாராட்டுவது ஒரு✅
விட்டுவிடுவிரா ❌ - விட்டுவிடுவீரா ✅