கற்கை நன்றே - கனவில் தொலைந்தவன்
எவர் கனவில்
எவர் தொலைந்தார்
Cuckold என்று ஆங்கிலத்தில் கிரண் நகர்க்கர்
1999 இல் எழுதி, 2000 இல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு
நூல் ‘கனவில் தொலைந்தவன்’. நூலை மொழிபெயர்த்திருப்பவர் அக்களூர் இரவி.
இந்த நூல் ஒரு வரலாற்றுப் புனைவு. 16ஆம் நூற்றாண்டின்
கதை. ராஜபுத்திர வரலாற்றின் மகத்தான வீரம் செறிந்த மன்னனாக அறியப்படும் ராணா சங்கா,
அவர் மகன் போஜராஜா என்ற மகராஜ் குமார், ராணி கர்மாவதி, இளவரசர்கள் விக்ரமாதித்தன்,
ரத்தன், இப்ராஹிம் லோடி, பாபர் போன்ற உண்மைப் பாத்திரங்கள் வழியாகப் புனைவு நெய்யப்படுகிறது.
வட இந்தியாவில் சுல்தான்கள் பல இடங்களைக் கைப்பற்றி
இருந்தார்கள். அவர்களோடு ராஜபுத்திரர்களுக்கு இடைவிடாத போர் நிகழ்ந்துகொண்டே இருந்தது.
இடார் என்ற சிறு பகுதியை குஜராத் அரசு கைப்பற்றிக்கொண்டது. அதனைத் தனது மைத்துனன் ராய்முல்லுக்குத்
திரும்பப் பெற்றுத் தருவதற்காக அரசர் ராணா சங்காவின் ஆணைப்படி படைக்குத் தலைமை ஏற்றுச்
செல்கிறான் மகராஜ் குமார்.
போர் என்றால் நேருக்கு நேராக மோதி வீரத்தை
நிலைநாட்டுவது என்ற மரபிலிருந்து மாறி, உயிரிழப்பைத் தடுப்பதற்காகப் பின்வாங்குதலும்
வீரத்தின்பாற்படும் என்ற அணுகுமுறையை மேற்கொள்கிறான் மகராஜ் குமார். கொரில்லாப் போர்
முறையை வீரர்களிடம் அறிமுகம் செய்கிறான். தோல்வி பெறும் நிலையிலிருந்து வெற்றியை அடையச்
செய்கிறான். அவனை மக்கள் கோழை என்று அவமதிக்கிறார்கள். மகராஜ் குமாரைப் பொறுத்தவரை
வெற்றிக்கோபுரம் கட்டுவதைவிடக் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீர்த் திட்டங்கள் முக்கியமானதாகப்
படுகிறது என்பதை நாவலாசிரியர் அவன் உளப் போக்கு வழியாகச் சொல்கிறார்.
இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து பாபர் இந்தியாவில்
மொகலாய அரசை நிறுவிய காலகட்டம் இங்கே பேசப்படுகிறது. போர்த்துகீசியர்கள் நுழைவும் கிறிஸ்துவின்
கதையும் அறிமுகமாகிறது. நாட்குறிப்பு வழியாக காபூலின் அரசன், செங்கிஸ்கானின் வழித்தோன்றல்
பாபரை அறிமுகப்படுத்தும் உத்தி நாவலின் நயம். ஒவ்வொரு படையெடுப்பிலும் அவன் முன்னேறிய
இந்தியப் பகுதியின் நீட்சி, கொள்ளையோடு போகாது டில்லியைக் கைப்பற்றினால் என்ன செய்வது
என்ற முதல் ஐயம் என பாபர் அரசை நிறுவுவான் என்பதற்கான கட்டியத்தை அவன் வருகைக்கு முன்னே
திறம்படச் சொல்லிவிடுகிறது புனைவு. தெரிந்த ஒரு வரலாற்றை அதன் முன்னும் பின்னுமான மன
நிலையோடு பேசுவதே புனைவுக்குப் பெருமை. அதனைச் சரிவரச் செய்திருக்கிறது இந்நூல்.
மதம் குறித்துப் பல இடங்களில் அலசப்படுகிறது.
இதுதான் உறுதியான பலன் என்று சொல்லாத இந்து மதத்தினரும், மதத்துக்காக உயிரைக் கொடுப்பவன்
உறுதியாக சொர்க்கத்தை அடைவான் என்று சொல்லப்படும் மதத்தினரைப் போலவே உறுதியுடன் செயல்படுவதை
எண்ணி வியக்கிறான் இளவரசன். நாட்டை வெற்றி பெற்றவன், மக்களிடம் தாங்களே அதிகாரம் உடையவர்கள்
என்பதை நிலைநாட்டும் செயலே ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தம்முடைய மதத்தை
நிறுவுவது என்றும் புத்த மதத்தின் மீது இந்து மதமும் இந்து மதத்தின் மீது இஸ்லாமும்
அதையே செய்தது என்றும் மகராஜ் குமார் வழியாக சிந்தித்துச் செல்கிறது நூல்.
பிருஹன்னடா புஷ்கர் ஏரிக்குச் சுற்றுலா சென்ற
பொழுது தாங்களும் மகாபாரத பீஷ்மரும் ஒன்றே என்று உரை செய்கிறான். அவன் ஒரு ஹிஜிரா.
ஹிஜிராக்கள் எனப்படும் மூன்றாம் பாலின பிரிவினர் நிலை, அவர்கள் அந்தப்புரங்களில் கொண்டிருக்கும்
அந்நியோன்னியம் நூலில் பேசப்படுகிறது.
கதையின் முடிச்சுகளில் பெண்கள் இறுதிவரை வருகிறார்கள்.
கிழவனை மணந்த ஏகாலி சுனேரியா நீதிக்காக வருபவள். மகராஜ் குமார் உறவை விரும்பி ஏற்பவள்.
கிழவனின் சந்தேகத்தாலேயே கொல்லப்படுகிறாள். அவளுக்கான நீதி மறுக்கப்படுகிறது. அதுவும்
எப்படி? அரசருக்கு எதிராகச் சதி செய்த இரண்டாம் இளவரசன், ராணி கர்மாவதியின் அரசர் மீதான
ஆளுமையால் நீதித்துறைக்குப் பொறுப்பாளனாக ஆக்கப்படுகிறான். அவனது நீதி அப்படி இருக்கிறது.
ஒரு பெண்ணின் ஆதிக்கம் இன்னொரு பெண்ணுக்கு வினை. அடுத்து லீலாவதி. அரசுக்கு நிதி தரும்
ஆதிநாத்ஜியின் பேத்தி. மகராஜ் குமாரை விடவும் மிகவும் சிறிய பெண். அவனை மட்டுமே விரும்புபவள்.
நூலில் மிகு புனைவு கௌசல்யாவின் பாத்திரம். மகராஜ் குமாரின் வளர்ப்புத் தாய் என்று
ஆசிரியர் சொல்கிறார். அவளையே அவனுக்குக் காதலியாகவும் பல நேரங்களில் சென்சார் தேவைப்படுமளவுக்கும்
எழுதுகிறார். ஆனாலும் அரசின் நிர்வாகம் அறிந்தவளாகவும் மகராஜ் குமாருக்கு மன அமைதி
தருபவளாகவும் அந்தப் பாத்திரம் மிக ஆழமாக வரையப்பட்டிருக்கிறது.
இன்னொரு முக்கியமான பெண் மகராஜ் குமாரின் மனைவி
பக்த மீரா என்று பின்னாளில் போற்றப்பட்ட மேர்த்தா இளவரசி. மீராவின் கதையை பக்தி வழியாக
நாம் அறிந்திருப்போம். அந்த மீராவின் கணவனாகவும் ஒரு அரியணைக்கு உரிய இளவரசனாகவும்
இருந்த மகராஜ் குமார் பக்கமாக நின்று பேசப்பட்ட நூல் இதுவாகத்தான் இருக்கும். பெண்கள்
விரும்பும், பெண்கள் மறுக்க முடியாத மேவார் இளவரசன் தன்னுடைய கணவனாக இருந்தும் அவனை
ஏற்காமல் மறுக்கும் பெண். அவளை நூல் முழுதும் நீலவிழியாள் என்றே சொல்லிச் செல்கிறார்
ஆசிரியர். அவள் கண்ணன் மீது பாடி ஆடுவதை அரண்மையிலும் நகரத்திலும் கேலி செய்தவர்கள்
இளந்துறவி என்று பேரரசர் வரை மதிக்கும் மன நிலை படிப்படியாகச் சொல்லப்படுகிறது.
நமக்கு மிகவும் பிடித்தவர்களையே வெறுக்க வேண்டிய
சூழல் எப்போது ஏற்படும் தெரியுமா? அவர்கள் காரணமாகவே நமக்கு வேண்டியவர்கள் நம்மை அவமதிக்கும்போது.
மகராஜ் குமார் மயிலிறகு சூடிய கிருஷ்ணனைச் சிறு வயது முதல் கதாநாயகனாகப் பாவித்து விரும்பியவன்.
அதே சியாமளனை மனைவி கொண்டாடி, சியாமளனுக்கே தான் சொந்தம் என்று தன்னை மறுக்கும்போது
மனைவியை விடவும் மயிலிறகு சூடியவனை வெறுக்கிறான். மனத்தால் அங்கீகரிக்கபடாதபோது என்னவெல்லாம்
செய்கிறான் தெரியுமா? இரவில் நீல வண்ணத்தை உடல் முழுதும் பூசிக்கொண்டு மனைவியிடம் கண்ணனாகவே
நிற்கிறான். அவனால் அவளை அடித்துத் துரத்த முடியாதா? அதில் என்ன பயன்? அவள் மனத்தைக்
கவர்வதற்கே அவன் பாடுபடுகிறான். நீலவிழியாள் அவனோடு நட்பு பாராட்டுகிறாள். அரண்மனையின்
வேலைகளில் அறிவுடன் நடந்துகொள்கிறால். கணவனுக்கு ஆலோசனைகூடச் சொல்கிறாள். அவள் நினைப்பதையே
சாதிப்பாள். ஆனாலும் அவள் கண்ணனுக்கே சொந்தமென்பாள்.
கண்ணன் நிலையில் மகராஜ் குமார் லீலாவதின் மனத்தில்
இருக்கிறான். லீலாவதி இன்னொருவருக்கு மணம் முடிக்கப்பட்டவள். அவளோ மகராஜ் குமாரை மனத்தில்
வைத்தபடி அவள் கணவனை நெருங்க விடாமல் இருக்கிறாள். போர் செய்ய அமைத்திருக்கும் கூடாரத்திற்கே
வரும் அவள் மகராஜ் குமாருக்கே தான் உரியவள் எனும்போது அவன் அறிவுரை சொல்லி அவளைப் போகச்
சொல்கிறான்.
மனமே உடலைக் கட்டுப்படுத்துகிறது. அதற்கு முடிச்சுப்போடப்பட்டவள்
சுகந்தா. இரண்டாவதாக அவளை மணம் முடித்து வைக்கிறார்கள். அவளையாவது இவன் கட்டுக்குள்
வைத்திருப்பானா? அவள் இவனை விரும்பினாலும் இவன் மனம் தயாராக இல்லை. அவள் மகராஜ் குமாரின்
தம்பியுடன் நட்பு பாராட்டுவதை அரண்மனையில் இதெல்லாம் சகஜமப்பா என்பதுபோல எழுதியிருக்கிறார்.
கௌசல்யாவின் மகன் மங்கள் மகராஜ் குமாரின் பிரியாத
துணை; நம்பகமானவன். உளவுத்துறையின் தலைவனாக அவனை நியமிக்கிறான் இளவரசன். கௌசல்யா காணாமல்
போகும்போது அவளைப் பற்றி மீண்டும் மீண்டும் விசாரிக்கும் இளவரசனிடம், “அவள் என்னுடைய
அம்மா” என்று சொல்கிறான். அவள் குறித்து அவனுக்கு வெறுப்பு இருக்கிறது. ஆனாலும் அம்மா
என்பதை அவன் விலக்க முடியுமா? அழகான படைப்பு மங்கள் என்ற நிதானம்.
போர் குறித்தும், மக்களின் மனோபாவம் குறித்தும்
பல இடங்களில் சொல்லப்படுகிறது. பாபரின் குறிப்புகளைப் படிப்பதன் வழியாக மக்கள் என்ன
மனநிலையில் இருப்பார்கள் என்பதை அழகாகச் சித்தரிக்கிரார் ஆசிரியர். “படை வரும் இடங்களில்
இருக்கும் மலைவாழ் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் தரக் கூடாது” என பாபர் தனது படைகளுக்கு
உத்தரவிட்டதை அறிகிறான் இளவரசன். தில்லியில் இருந்த லோடி, தனக்கு விசுவாசமாக இல்லாதவர்கள்
என நினைத்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ததையும் நினைத்துப் பார்க்கிறான். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எண்ணுகிறான்
மகராஜ்குமார்.
பாபர் முதன் முறையாகப் பீரங்கியைப் பயன்படுத்துவதையும்
துப்பாக்கிகள் வைத்திருப்பதையும் பீரங்கிகளை போர்ச்சுகீசியரிடமிருந்து வாங்குவத்ற்கு
அன்றைய சூழலில் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடுகிறது நூல். ஓர் அந்நியனை அவனது
புதிய போராயுதத்தோடு எதிர்க்க இன்னொரு அந்நியனை நாடும் சூழல் உண்டாவதைப் படம் பிடிக்கிறது.
ராஜபுத்திரர்கள் ராணாவின் தலைமையில் ஒன்றுபட்டுப் பாபரை எதிர்த்தும் தோல்வியடைகிறார்கள்.
போர் நடக்கும்போதே கட்சி மாறி பாபரிடம் சேர்ந்த கதையும் உண்டு.
காலரா பரவியபோது ஆயிரக்கணக்கனவர்கள் செத்து
மடிந்தது, ராஜாஸ்தானின் வறண்ட நிலவியல் என சித்திரம் விரிகிறது கூடவே காவல் துறை, மேட்ச்லாக்
போன்ற தற்காலச் சொற்கள் பிதுங்கி நிற்கின்றன. அவற்றைத் தலையில் தட்டிவிட்டு வாசிக்க்த்
தூண்டுவது ஆழமான விவரிப்பு. பேரரசர் ராணா மகனை எப்போதும் நம்பாதவராக இருக்கிறார். அவன்
எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர் சொல்கிறார், "நீ காலத்திற்கு முன்னே வந்துவிட்ட தீர்க்க தரிசி” என்று. இவ்வாறு கதையில் வரக்கூடிய பல வசனங்களும்,
பெண்போல் ஆடை அணிந்து பொய்த்தோற்றம் கொள்ளும்போது அவனுக்கு உண்டாகும் கேள்விகள், மொழி
குறித்து ஏற்படும் சந்தேகங்கள், தத்துவத் தேடல்கள் என்று பயணிக்கும் கதையில் சில அத்தியாயங்களை
ஆசிரியரே சொல்வதாக எழுதியிருக்கிறார். மகராஜ் குமார் பார்வையில் கதை நகரும்போது அந்த
உத்தி கைகொடுக்கவில்லை.
அரசை
விரிவாக்க நினைக்கும் ஓர் இளவரசனின் கனவு குறித்து விரியும் நூல் அவனுடைய உள்ளத்துக்குள்
ஒரு போர் முனையைக் குவிக்கிறது. பாபருக்கு ஹிந்துஸ்தானத்தைத் தனதாக்குவது கனவு. அவன்
அடிக்கல் நாட்டுகிறான். அதில் தொலைந்தது மகராஜ் குமாரின் கனவு மட்டுமா?
சிறிதும் பிசிறில்லாமல் அக்களூர் இரவி மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கில cuckold என்ற சொல் பெண்மையை அல்லது பெண்ணைக் கொச்சைப்படுத்தும் பொருள் கொண்டது. ஆதலால் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு தலைப்பு வைத்ததாகக் குறிப்பில் சொல்கிறார். பல இடங்களில் ராஜபுதனப் பகுதிக்குரிய பொருள்கள், உணவுகள், உடைகள் குறித்த சொற்களைப் பெயர்க்காமல் உணர்வுகளைக் கடத்தியிருப்பதில் வெற்றி பெறுகிறார். பேரரசுகளின் மாற்றங்களில் எத்தனையோ கனவுகள் தொலைகின்றன. மக்களுக்காகவும் கனவு கண்ட அரசனைக் காட்சிப்படுத்தியதில் தொலையா நல்லிசை பெறுகிறது நூல்.

Comments
Post a Comment