கற்கை நன்றே - குற்றமும் தண்டனையும்

 

பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் இன்றும் போற்றப்படுவதற்குக் காரணம் மானுட தரிசனத்தை முன்னிறுத்தியதாலேயே எனலாம். அத்தகைய நோக்கோடு எழுதியவர்களில் ரஷ்யாவின் டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், செக்காவ் போன்றவர்கள் இன்றும் உலகெங்கும் போற்றப்படுகிறார்கள். பாரதியார் கவிதையைச் சொல்லாத இலக்கிய மேடைகளைத் தமிழ்நாட்டில் எவ்வாறு காண முடியாதோ அப்படியே தஸ்தாவ்யேஸ்கியை மேற்கோள் காட்டாத உலக இலக்கியவாதிகள் இல்லை எனலாம்.

     குற்றம் என்று எதைச் சொல்லலாம்? இது மிகப் பெரிய கேள்வி. "உங்கள் சரி எனக்குத் தவறு" என்ற ஜெயகாந்தனின் வாசகம் நினைவுக்கு வருகிறது. சரி என்று ஓரிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் இன்னோரிடத்தில் தவறு என்று சொல்லப்படுகிறது. ஓர் இனத்தின் வழக்கங்களில் இருந்து மாறியவனை அந்த இனத்தவர் தண்டிப்பது அவர்களுக்குச் சரி. சட்டப்படி தவறு. மன்னர் காலத்துச் சரி'கள் தற்காலத்தில் கேலிக்கூத்தும் குற்றமுமாகின்றன. நீதி குறித்த எழுச்சி மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் காரணமாக நீதியின் கைகளில் தனி மனிதன் என்ற எல்லையைத் தாண்டி மனித குலம் முன்வைக்கப்படுகிறது. அப்படியொரு மானுடம் தழுவிய புனைவே "குற்றமும் தண்டனையும்"

     தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நூல் படிக்கும்போதே சக மனிதரின் மீது நாம் வைத்திருக்கும் கருத்துகள் மறுவுறுவாக்கம் அடைவதை உணர முடியும். கதையின் நாயகன் ரஸ்கோல்னிகோவ் ஒரு கொலை செய்கிறான். கொலை செய்யப்பட்டவள் ஒரு சாதாரண அடகு பிடிக்கும் கிழவி. எதற்காக அவளைக் கொலை செய்கிறான் என்ற கேள்வியோடு ரஸ்கோல்னிகோவின் மன உளைச்சலும் சேர்ந்து கதையை நகர்த்துகிறது. 

தவறு செய்துவிட்ட ஒரு குற்றவாளி அதை எப்படி மறைக்க முயல்வான், அவன் பிறர் சாதரணமாகப் பேசுவதையும் தான் செய்த குற்றத்தோடு தொடர்புபடுத்தி எவ்வாறு தனக்குத் தானே குழம்புவான், தன்னைப் பிறர் துப்பறிய முயல்கிறார்களோ என்ற சந்தேகம் வரும்போது தானே ஒரு இரையை அவர்கள் முன் தூக்கிப்போட்டு அவர்கள் எண்ணங்களுக்கு எப்படித் தூண்டிலிடுகிறான் என்பதை இணுக்கு இணுக்காக ஆய்ந்து ரஸ்கோல்னிகோவ் பாத்திரத்தின் வழியாக எழுதியுள்ளார்.

ரஸ்கோல்னிகோவ் கொலை செய்வதற்கு முன்பிருந்தே அவனோடு பின்னப்படும் பாத்திரங்கள் இருந்தும், இறந்தும் கதையை ஆழப்படுத்துகின்றன. கொலை செய்வதற்குமுன் மர்மெலாதெவ் என்ற அரசுப் பணியாளனை மது விடுதியில் தற்செயலாகச் சந்திக்கிறான் ரஸ்கோல்னிகோவ். மர்மெலாதெவ் தன்னுடைய மனைவி, குழந்தைகள், முதல் மனையின் மூலம் பிறந்த மகள் அனைவரின் கதையையும் சொல்கிறான். அவனுடைய மகள் சின்னஞ்சிறு வயதில் குடும்பத்தின் வறுமைக்காக விலைமகளானதையும் சொல்கிறான். அப்போது ரஸ்கோல்னிகோவுக்குத் தெரியாது, அந்தச் சிறு பெண்ணே தனக்கு அக விடுதலை அளிக்கப் போகிறாள் என்று.

ரஸ்கோல்னிகோவின் பின்புலம் கொலை செய்யும் அளவுக்கு இருக்கிறதா? அவன் ஒரு சட்டம் பயிலும் மாணவன். தனக்கென ஒரு கொள்கையை உடையவன். படிப்பு சொல்லிக்கொடுத்து ஃபீஸ் கட்டும் அளவுக்கு வறியவன். அந்த வேலையையும் விட்டுவிட்டு வெறுப்பில் இருப்பவன். அவனுக்கு தாயும் தங்கையும் இருக்கிறார்கள். அவன் தங்கை இவனுக்காகவும் தாயின் நன்மைக்காகவும் பீட்டர் பெத்ரோவிச் என்பவரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்திருக்கிறாள்.  ரஸ்கொல்னிகோவிடம் மர்மெலாதெவ் தன் மகளைப்பற்றிச் சொல்லும்போது, அவளைத் தன் தங்கை துனியாவுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். ரஸ்கோல்னிகோவ் மனநிலையைக் கனவு ஒன்றின் வழியாக படமாக்குகிறார் ஆசிரியர். சுமையை இழுக்க முடியாத ஒரு கிழட்டுக் குதிரையை, குதிரைக்குச் சொந்தக்காரனும், அவன் ஏற்றிக்கொண்ட ஆட்களுமாகச் சேர்ந்து கொல்வதுபோன்ற கனவு காண்கிறான் ரஸ்கோல்னிகோவ். கனவில் சிறுவனாக அவன் தந்தையிடம், “அதை எதற்காகக் கொன்றார்கள்?” என்று கேட்டு அழுகிறான். அப்படிப்பட்டவன், தானே அது போல ஒரு கொலையைச் செய்ய முடிவு செய்தது எதனால்? கொலை செய்வதற்கு முன்பு பூங்காவில் பார்க்கும் ஒரு சிறு பெண்ணின் ஆதரவற்ற நிலைக்கு வருந்துகிறான். அடகு வைத்த காசிலிருந்து போலீசுக்குப் பணம் கொடுத்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றவும் சொல்கிறான். அப்புறம் எங்கிருந்து வந்தது இந்தக் கொலை செய்யும் எண்ணம்? அதற்கு மாஜிஸ்ட்ரேட் போர்ஃப்ரியுடனான அவன் உரையாடல் விளக்கம் தருகிறது.

ரஸ்கோல்னிகொவ் கொலை செய்தபின் கால் போன போக்கில் நடந்து நண்பன் ரசூமிகினைச் சந்தித்து இருப்பிடம் கூடச் சொல்லாமல் வந்துவிடுகிறான். போலீஸ் பல்கலை மாணவர்களின் அடையளங்களைச் சரி பார்க்கும் சாதாரண நடைமுறைக்காக அவனைக் காவல் நிலையம் வரச் சொல்லியிருக்க அதை அறியாமல் பயத்திலும் குழப்பத்திலும் சென்றவன், அங்கே கிழவியின் கொலை பற்றிப் பேச்சு எழ மயங்கி விழுகிறான். அவன் அறைக்கு வந்த பின்னும் உடல் நிலை தேறாமல் மயங்கியே இருக்க அவனைத் தேடிக் கண்டுபிடித்து வந்த நண்பன் ரசூமிகின் அவனைக் கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறான். அவன் அன்றாடம் இந்தக் கொலை பற்றி நகரத்தில் போலீசில் பேசுவது குறித்து மருத்துவர் ஜோசிமோவுடன் விவாதிக்கிறான். ஒரு கட்டத்தில் கிழவியிடம் அடகு வைத்தவர்களிடம் விசாரணை செய்கிறார்கள் என்று ரசூமிகின் சொல்வதைக் கேட்டு, ரஸ்கோல்னிகோவ் தான் அடகு வைத்த, தன்னுடைய தந்தையின் நினைவாக இருக்கும் கடிகாரத்தை மீட்க உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறான். ரசூமிகின் அந்த விசாரணையை மேற்கொண்டிருக்கும் தனது மாமா போர்ஃப்ரியிடம் அழைத்துச் செல்கிறான்.

போர்ஃப்ரி அவன் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டிக்காட்டி அதன் விளக்கங்களையும், அதனை எழுத முற்பட்ட காரணங்களையும் கேட்கிறார். அந்தக் கட்டுரையில் அவன் மனிதர்களை சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் என்று இரண்டு விதமாகப் பிரித்துக் காட்டியிருக்கிறான். சாதாரணமானவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டும் ஏற்றுக்கொண்டும் இருப்பவர்கள். சட்டங்களை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. ஆனால் அசாதாரணமானவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்வதற்கும் சட்டத்தை உடைப்பதற்கும் உரிமை படைத்தவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளான். அது குறித்து போர்ஃப்ரி விளக்கம் கேட்க, மொத்த மனித குலத்துக்கு நன்மை விளையுமானால் குற்றம் செய்யும் உரிமையை எடுத்துக்கொள்ள அசாதாரணமானவர்களால் முடியும் என்று சொல்கிறான் ரஸ்கோல்னிகோவ்.

தவிர மர்மெலாதவ் மகளான சோனியாவிடமும் எளியவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அந்தக் கிழவி சமூகத்திலிருந்து அழிக்கப்பட வேண்டியவள் என்றும் தான் கொலையை ஒப்புக்கொண்டாலும் அது குற்றமென்று ஒப்புக்கொள்ள முடியாதென்றும் அவன் சொல்கிறான். அதிலிருந்து, அவன் கொலை செய்தது அசாதாரண மக்களின் பிரதிநிதியாக அவன் தன்னை நினைத்ததால் என்று கொள்ள முடிகிறது. சைபீரியச் சிறைக்குச் சென்ற பின்னாலும் தான் செய்ததை சட்டத்திற்குப் புறம்பானது என்பதைத் தவிர குற்றம் என்று அவன் உணரவில்லை. சிறையை விடவும் அவனை அதுவே வருத்துகிறது. அவனைப் பொறுத்தவரையில் முதல் முயற்சியின் தோல்வி ஒரு குற்றம். அதனால் அவன் படும் மன உளைச்சல் தண்டனை. அவன் சோனியாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு கண்ணீரால் தன் காதலை வெளிப்படுத்திய கணத்திலிருந்தே பிற கைதிகளிடம் முதன்முறையாகப் பேச முயல்கிறான். அந்த மாற்றத்திலிருந்தே அவன் குற்றத்துக்கான தண்டனையை மானுடத்தின் முன்னால் ஏற்பவனாகிறான்.

தஸ்தயெவ்ஸ்கியின் கதை மாந்தர்கள் நம் மனத்திலிருந்து பிளக்கப்பட்ட எண்ணங்களின் பாகங்கள் என்றே சொல்லலாம்.

ரஸ்கோல்னிகோவின் தாய் பல்கேரியா அலெக்சான்ட்ரோவ்னா, துனியா, சோனியா, காத்ரீனா இவானோவ்னா, வேலைக்கரப் பெண்மணி நஸ்டாஸ்யா, துனியா வேலை செய்த பண்ணை முதலாளி மார்ஃபா பெத்ரோவ்னா, அமாலியா இவனோவ்னா போன்ற பெண்கள் ஒட்டுமொத்தப் பெண் குலத்தின் சாட்சிகள்.

காத்ரீனா இவானோவ்னா தன் குழந்தைகளைப் பிச்சையெடுப்பதற்காகத் தயார் செய்வதும், இறுதியாக அவள் சவத்தின் அருகே அவளுடைய மதிப்பு மிக்க சான்றிதழ் இருப்பதும் சமூகத்தின் தாழ்வுக்கு ஆசிரியர் தரும் மாதிரி.

ரசூமிகின் போல ஒரு நண்பன் இருந்தால் எத்தனை கொடும் தண்டனையையும் அனுபவித்துவிடலாம். துனியாவுக்கு ஏற்பாடு செய்த மணமகன் பீட்டர் பெத்ரோவிச்சின் கீழான எண்ணத்தைக் கிழித்துத் தொங்கவிடும் ரஸ்கோல்னிகோவ் தன் நண்பனிடம் துனியாவுக்குத் துணையாக இருக்கும்படி சொல்கிறான். ரசூமிகின் தன்னைப் போலவே ஏழை என்றாலும் எண்ணங்களால் தன் தங்கைக்கு அவனே தகுதியானவன் என்று முடிவு செய்கிறான்.

பீட்டர் பெத்ரோவிச் பணமுள்ளவன். அரசுப் பதவியில் இருப்பவன். நடத்தையில் சமூகத்தில் மதிக்கப்படுபவன். பெண்கள் தன்னைவிடக் கீழாக, தனக்கு அடிமையாக இருக்க வேண்டும், ஆனால் தன்னை மட்டுமே சுற்றி வரவேண்டும் என்று விரும்புகிறவன். இது சராசரி ஆண்களின் எண்ணம் என்றாலும் அதைவிடவும் கீழாக அவன் ஆவது, துனியாவை அடைவதற்காக ஒன்றுமறியாத அப்பாவி சோனியாவின் மீது பழி சுமத்துவதனால்.

இவனை விடவும் இன்னும் கீழான நடத்தை கொண்டவன் ஸ்விட்ரிகைலோவ். தன் பண்ணையில் வேலை செய்த பெண்களை ஏமாற்றி அடைபவன். துனியாவின் முதலாளி. அவளை அடையக் கடைசி வரை முயற்சி செய்கிறான். ஸ்விட்ரிகைலோவ் வாய்மொழி வழியாகவே துனியாவின் நற்பண்புகளைப் பட்டியலிட வைக்கிறார் ஆசிரியர். மேலும் அவன் மூலமாகப் பெண்கள் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதைக் கேலியும் செய்துவிடுகிறார். அவனிடம் சிறிதளவு ஈரம் இருப்பதை இரண்டு செயல்களால் காண்பிக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. சோனியாவின் தம்பி தங்கைகளை விடுதியில் சேர்க்கவும் படிக்க வைக்கவும் உதவுவது; சோனியா சைபீரியா செல்வதற்கான பணத்தை வழங்குவது. அவன் துனியாவின் கண்களில் காணும் தரிசனமே இறுதியாகிறது. துனியாவைப் பலவந்தப்படுத்தும் அவனைத் துப்பாக்கியால் மூன்று முறை சுட முயற்சி செய்து இயலாமல், அவனிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும் துனியாவிடம் கடைசியாக அவன் கேட்கிறான், “உன்னால் என்னைக் காதலிக்கவே முடியாதா?” என்று அவளின் “இல்லை” என்ற பதில் அவனது கடைசி அத்தியாயத்தை எழுதுகிறது.

அக தரிசனங்கள் வழியாக நிறையும் பாத்திரங்களின் வார்ப்பு இந்த நூல். தியாகம், சேவை இரண்டுமே உயர்வைத் தருகின்றன என்பதற்கு துனியாவும் சோனியாவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். சோனியா வறுமையால் விலைபோனவள். மனத்தால் புனிதமானவள். சோனியாவின் கால்களில் விழுந்து ரஸ்கோல்னிகோவ் அனைத்தையும் சொல்வதற்கான காரணம் அவள் ஒட்டுமொத்தத் துயரத்தின் உருவாக இருப்பதால் எனச் சொல்கிறான். அவள் ரஸ்கோல்னிகோவிடம், “நிஜமாகவே ஓர் உயிரைக் கொல்வதற்கு உரிமை படைத்தவரா நீங்கள்?” என்று கேட்கிறாள். “அந்தக் கிழவியைக் கொன்றதன் மூலம் என்னை நானே கொன்று கொண்டேன்” என்கிறான் ரஸ்கொல்னிகோவ். இனி என்ன செய்ய வேண்டும்? என்ற அவன் கேள்விக்கு சோனியா சொல்லும் பதில் இது: “உடனே இந்தக் கண்மே செல்லுங்கள்.முச்சந்தியில் போய் மண்டியிட்டு நீங்கள் மாசுபடுத்திவிட்ட இந்த மண்ணை முத்தமிடுங்கள். இந்த உலகில் உள்ள எல்லோரும் கேட்கும்படியாக “நான் ஒரு கொலைகாரன்” என்று உரக்கச் சொல்லுங்கள்”. ஒரு சிறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சோனியாவின் முன் புத்துயிர்ப்புப் பெறும் கணம் நாவல் அறத்தின் கைகளைப் பிடிக்கிறது.

தஸ்தயெவ்ஸ்கி மரண தண்டனை விதிக்கப்பட்டு, பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர். சைபீரியாவில் பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர். இந்த காலகட்டம் அவருக்குள் அறம் சார்ந்த, புரட்சி சார்ந்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எதார்த்தம் என்ற தராசு முள் எந்தக் கோட்பாட்டுக்கும் அவரது நூல்களில் சாய்ந்ததில்லை. அவருடைய காலகட்டத்தில் மனித உயர்வுக்காக எதையும் செய்யலாம் என்ற கோட்பாடு பெரும்பான்மையான இளைஞர்களிடம் பரவியிருந்தது. மானுடத்தை நாசமாக்கும் சிந்தனைகளை லெபட்ஸினியாகோவ் என்ற பாத்திரத்தின் வழியாக வெறுப்புடன் கேலி செய்திருக்கிறார்.  அறத்தை மீறிய சிந்தனைகள் ஒரு மனிதனின் அகத்தை எவ்வளவு சிதைக்கும், அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதன் ஓர் அலசல் குற்றமும் தண்டனையும். சாமானியனை நீ பேன் என்று நினைத்தால் நீயும் இன்னொருவருக்குப் பேன் போலத்தான் என்று உணரச் செய்ய முயல்கிறார்.

குற்றம் எப்போது செய்தவனால் உணரப்படுகிறதோ அப்போது உள்ளம் அமைதியடையும். தண்டனையும் மன்னிப்பாகும்.  


Comments